அமெரிக்காவின் புதிய வரி கொள்கையின் அடிப்படையில் இலங்கை உள்ளிட்ட GSP + நிவாரணம் கிடைக்கும் அனைத்து நாடுகளுக்கும் அது இல்லாமல் போகும் நிலைமை காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஸ டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அமெரிக்கா, உலக நாடுகளில் அதிகமாக வரி விதித்துள்ள முதல் ஐந்து நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடங்குகிறது.
இதேவேளை அமெரிக்கா விதித்துள்ள வரி தொடர்பில் அரசாங்கம் வெகு விரைவில் கலந்துரையாட வேண்டும் என இலங்கை பொருட்கள் மற்றும் போக்குவரத்து சங்கத்தின் செயலாளர் இனாம் கபூர் மற்றும் கொழும்பு பல்கலைக்கழக பொருளாதார பிரிவின் பேராசிரியர் ப்ரியங்க துனுசிங்க ஆகியோரும் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா விதித்துள்ள வரிக் கொள்கை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அரசாங்கத்தின் குழுவொன்று அடுத்த இரண்டு நாட்களுக்குள் அமெரிக்கா நோக்கிச் செல்லவுள்ளதாகச் சுதந்திர வர்த்தக வலய முதலீட்டாளர்களின் சங்கத்தின் தலைவர் தம்மிக்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

