கொழும்பு மருதானை, பஞ்சிகாவத்தை பகுதியில் இன்று (06) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிளை செலுத்திய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடந்த சில நிமிடங்களிலேயே முகத்துவாரம் பொலிஸார், மாளிகாவத்தை போதிராஜ மாவத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞரை கைது செய்தனர். இவர், திட்டமிட்ட குற்றவாளியான கெசல்வத்த கவி என்பவரின் நெருங்கிய நண்பர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான முறைப்பாட்டை அடுத்து, முகத்துவாரம் பொலிஸாரின் மூவர் இணைந்து சந்தேக நபரை சுற்றிவளைத்தபோது, அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து, கிம்புல எல பகுதிக்கு தப்பிச் சென்றார். பின்னர் அங்கு பதுங்கியிருந்த சந்தேகநபர் முச்சக்கரவண்டி மூலம் தப்ப முயன்றபோதும், மாதம்பிட்டிய பொலிஸாரின் உதவியுடன் கைது செய்யப்பட்டார்.
விசாரணையின் போது, துப்பாக்கி தாரியை கெசல்வத்த கவியின் அறிவுறுத்தலின் பேரில் வாழைத்தோட்டப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றதாக கைதானவர் வாக்குமூலம் அளித்துள்ளார். துப்பாக்கிச் சூடு நடைபெற்ற பின்னர், குறித்த நபர் புறக்கோட்டையில் இறங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கி தாரி தொடர்பாக மேலதிக தகவல்கள் இல்லை என்றும் கைதான சந்தேக நபர் வாக்குமூலம் வழங்கியிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்>மன்னாரில் 36 ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

