தவராசா சுபேசன்
யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாணத்தில் இன்றும் சாதியப் பாகுபாடு பாரிய தாக்கங்களையும் – எதிர் விளைவுகளையும் ஏற்படுத்தி வருகின்றது.
ஆலயம் தொடங்கி அரசியல் வரை சாதியப் பாகுபாடு பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.
இன்று தொழில்நுட்பத்தின் அதி உச்ச வளர்ச்சி காரணமாக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி நடக்காத ஒன்றை நடந்ததாக நம்பச் செய்யும் அளவிற்கு தொழில்நுட்ப உலகு வளர்ச்சி கண்டு விட்டது.
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இறந்த ஒருவரை மீளவும் உயிர்ப்பிக்க முடியாதே தவிர ஏனைய அனைத்து அசாத்தியங்களையும் சாத்தியமாக்கி வருகின்றது இந்த தொழில்நுட்ப உலகு.
இந்த நவநாகரீக உலகில் தான் இன்றும் சாதியப் பாகுபாடுகளும்-மூட நம்பிக்கைகளும் ஏதோவொரு மூலையில் இன்றும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
குறிப்பாக தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு மாகாணத்தில் அனைத்து விடயங்களிலும் சாதியம் அதிகளவில் செல்வாக்குச் செலுத்துகின்றது.
நாட்டில் தமிழ் இனத்திற்கு எதிராக பெரும்பான்மையின அரசாங்கங்களால் கடந்த காலங்களில் பல அடக்குமுறைகள்-ஒடுக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன.
தமிழினம் தலைநிமிர முடியாத அளவிற்கு பேரினவாத சக்திகள் கடந்த காலங்களில் படுகொலைகளைச் செய்துள்ளன.
அந்த இழப்பில் இருந்து இன்றுவரை மீள முடியாத இனமாக ஈழத்தமிழ் இனம் இருந்து வருகிறது.
இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்கள் இன்றுவரை அடையாளம் காணப்படாத நிலையில் மண்ணில் புதையுண்டுள்ளனர்.
ஒருபுறம் நாட்டிற்குள் இன,மத ரீதியான ஒடுக்குமுறைகள் கடந்த காலத்தில் பரவலாகவும்-தற்போது ஆங்காங்கேயும் இடம்பெற்று வரும் நிலையில் சிறுபான்மைக்குள் சிறுபான்மை சாதிய அடிப்படையில் ஒதுக்கப்படுகின்ற,வஞ்சிக்கப்படுகின்ற நிலைமையும் காணப்படுகின்றது.
குறிப்பாக ஆலயங்களில் சாதியப் பாகுபாடு அதிகளவில் பார்க்கப்படுகின்றது.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென்மராட்சிப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட வரணி கிராமத்தில் உள்ள ஓர் ஆலயத்தில் சாதிய அடிப்படையில் ஒடுக்கப்பட்ட மக்களை உயர்சாதியினர் தேர் இழுக்க விடாமல் செய்ததுடன் -கனரக வாகன உதவியுடன் தேர் இழுத்து மனட்சாட்சியைப் புதைத்து சமயக் கடமையை நிறைவேற்றியுள்ளனர்.
அதன் பின்னர் அந்த ஆலயம் தற்போது மூன்று வருடங்களாக திருவிழாக் கோலம் காணாமல் இருக்கின்றது.
திருவிழாவை நடத்தினால் தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் சுவாமி காவுவதற்கும்-தேர் இழுப்பதற்கும் வந்து விடுவார்கள் என்ற அச்சமே திருவிழா நடத்தப்படாமைக்கு காரணம் என ஒடுக்கப்பட்ட சாதியினர் தெரிவிக்கின்றனர்.
கிராமங்களில் உள்ள சில ஆலயங்களின் உள்ளே தாழ்த்தப்பட்ட சாதியினரை அனுமதிக்காத நிலை இன்றுவரை காணப்படுகின்றது.
அவ்வாறான ஆலயங்களில் தாழ்த்தப்பட்ட சாதிய மக்கள் ஆலய வளவிற்கு வெளியே நின்று வழிபட வேண்டிய நிலை காணப்படுகின்றது.
கடந்த காலங்களில் சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் உயர்சாதியினருக்கு அடங்கியும்-பணிந்தும் நடந்தனர்.
சில இடங்களில் உயர்சாதியினரின் அடிமைகளாகவும் அவர்கள் நடத்தப்பட்டனர்.
ஆனால் இன்று ஒடுக்கப்பட்ட மக்களும் கல்வி,பொருளாதார ரீதியாக முன்னேற்றம் கண்டிருப்பதால் அவர்கள் தமக்கு இருக்கும் உரிமைகளை உணர்ந்தவர்களாகவும்-எதிர்த்துக் கேள்வியெழுப்ப துணிந்தவர்களாகவும் வளர்ச்சி கண்டிருப்பதால் இவ்வாறான சாதிய ரீதியாக ஒடுக்குமுறை காணப்படும் இடங்களில் தமது உரிமைகளுக்காக போராடும் சந்தர்ப்பங்களில் வன்முறைகள் நிகழ்கின்றன.
மிக முக்கியமான அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சிசபைத் தேர்தலில் வடக்கு மாகாணத்தில் சாதியம் பாரிய செல்வாக்கினைச் செலுத்தியுள்ளது.
யாழில் உள்ள சில கிராமங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி பல கட்சிகள் சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுடைய வாக்குகளையும் பெறும் முனைப்பில் அவர்கள் சார்பில் வேட்பாளர்களை நிறுத்திய போதிலும் அவர்களுக்கு விகிதாசாரம் ஊடாக பிரதிநிதித்துவம் வழங்க முன்வரவில்லை.
பல சமுகங்களைக் கொண்ட வட்டாரங்களில் தாழ்த்தப்பட்ட சாதியின மக்கள் உயர்ந்த சாதி வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்துள்ளனர்.
தாழ்த்தப்பட்ட சாதி மக்களை அதிகமாக கொண்ட சில வட்டாரங்களில் கூட உயர் சாதியைச் சேர்ந்த வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
மாறாக தமது தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த வேட்பாளருக்கு வாக்களிக்காத நிலைமை காணப்படுகின்றது.
சாதிய அடிப்படையில் உயர் நிலையில் இருப்பவர்கள் ஒருபோதும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த வேட்பாளருக்கு வாக்களிக்க முன்வரவில்லை என்பதும் ஆய்வின் ஊடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
சில கிராமங்களில் இன்றும் உயர் சாதியினருக்கு ஒரு கட்டாடியார் (சலவைத் தொழில் செய்பவர்),தாழ்த்தப்பட்ட பகுதியினருக்கு இன்னொரு கட்டாடியார் என்ற பாகுபாடு காணப்படுகின்றது. அதனுள்ளும் உயர்ந்த சாதியினருக்கு பணி செய்யும் கட்டாடியார் உயர்வானவராக மதிக்கப்படும் நிலை காணப்படுகின்றது.
சில கிராமங்களில் சாதிய மற்றும் சமூக முரண்பாடு காரணமாக இரண்டு மாதர் சங்கங்கள் இயங்கி வருகின்ற நிலை உள்ளது.
தாழ்த்தப்பட்ட சாதியினரை உயர் சாதியினர் ஏற்றுக்கொள்ளாததன் விளைவே ஒரு கிராமத்திற்குள் இவ்வாறு இரு வேறு சமூக மட்ட அமைப்புக்கள் இயங்க காரணமாக அமைகின்றது.
நாட்டிற்குள் சிறுபான்மையினரான தமிழ் மக்கள் தமக்குள் சாதிப் பாகுபாட்டைக் காரணம் காட்டி பொது விடயங்களில் கூட பிரிந்து நிற்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்தியாவில் சில கிராமங்களில் இன்றும் வேறு சாதியைச் சேர்ந்தவரை காதலித்தால் கொலை செய்யும் அளவிற்கு சாதிய வெறி காணப்படுகின்றது.
அந்த சாதிய வெறி வடக்கு மாகாணத்திற்குள்ளும் அழுத்தமாக தடம் பதித்துள்ளது.
அதிலும் நகர் பகுதியை விட கிராமங்களில் பெரிதும் தாக்கம் செலுத்தி வருகின்றது.
பல இழப்புக்களைக் கடந்து வந்த தமிழினம் மேலும் இவ்வாறு தமக்குள் பிளவடைந்திருப்பது வேறு தரப்பினரின் ஆதிக்கத்திற்கு இலகுவாக வழிசமைத்து விடும்.
பள்ளிப் பருவத்தில் இருந்து சாதியத்தை களைந்து சகோதரத்தைப் பேண வேண்டியது கட்டாயம்.ஆனால் சில பாடசாலைகளில் ஆசிரியர்களே மாணவர்கள் மத்தியில் சாதிய அடிப்படையில் பாகுபாடு காட்டுகின்றனர் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.
அனைத்து விடயங்களையுமே மாற்றியமைக்கக்கூடிய தளமாக பாடசாலை காணப்படுகின்றது.அங்கு விதைக்கும் விதைகளே சமுகத்தில் விருட்சங்களாக மிளிருகின்றன.
எனவே பாடசாலை மட்டத்தில் சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டும்.பாகுபாடுகளைக் களைய வேண்டும்.அதுவே சமத்துவமான,ஆரோக்கியமான எதிர்கால சந்ததியை உருவாக்கும்.
மனிதர்களாகிய நாம் இருந்த இடத்தில் இருந்து பல படிகள் முன்னேறி வந்து விட்டோம்.
மேற்கத்தேய நாடுகளுடைய கலாசாரங்கள் பலவற்றை பின்பற்ற தொடங்கி விட்டோம்.
ஆனால் தவிர்க்க வேண்டிய கலாசாரத்தை இறுகப் பிடித்தும்-பின்பற்ற வேண்டிய சமத்துவத்தையும்-சகோதரத்துவத்தையும் புறந்தள்ளி விடுகிறோம் என்பதே உண்மை.
தவிர்க்க வேண்டியதனைத் தவிர்த்து பின்பற்ற வேண்டியதனை பின்பற்றினால் தமிழர் கலாசாரம் தொடர்ந்தும் பேணிக் காக்கப்படுவதுடன்-நாட்டு மக்களுக்குள் நல்லிணக்கம் ஏற்பட்டு சமத்துவமான எதிர்காலத்திற்கு அது வித்திடும்.
செம்மணி மனித புதைகுழியில் மீட்கப்பட்ட 43 பொருட்களை மக்கள் பார்வையிட்டனர்
