நாட்டின் அனைத்துப் பிரிவினரையும் பொருளாதாரச் செயல்பாட்டில் ஈடுபடுத்தும் நோக்கில் இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பது தொடர்பாக நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் நேற்று (21) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற முதற்கட்ட கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
செயற்திறனுடனும் திறமையாகவும் பொருளாதார செயல்முறையை கையாள்கையில் பொதுவான புழக்க முறையொன்றினை நிறுவுவதன் முக்கியத்துவம் குறித்து ஜனாதிபதி அக்கரை வெளியிட்டுள்ளார்
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் இதன் போது ஆராயப்பட்டது.
கடந்த அரசாங்கங்களில் பன்முகப்படுத்தப்பட்ட நிதிக்காக பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டிருந்தாலும், அந்தப் பணம் பயனுள்ள திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படவில்லை எனவும் பன்முகப்படுத்தப்பட்ட நிதியை தேசிய திட்டங்களுக்குப் பயன்படுத்தக் கூடிய வகையில் வழங்குவது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
மேல் தளத்தில் உள்ள பொருளாதாரத்தை கீழ் மட்டத்திற்கு நகர்த்த வேண்டும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அனைத்து பிரதேசங்களுக்கும் பிரிந்து செல்லக் கூடிய ஒரு பொருளாதாரத் திட்டத்தைத் தயாரிப்பதன் முக்கியத்துவத்தையும் குறிப்பிட்டார்.
தொழில் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயத்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர் ரஸல் அபோன்சு, பிரதி திறைசேரி செயலாளர் ஏ.கே. செனவிரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.