ஒற்றையாட்சி முறைமையே இனப்பிரச்சினையாக அடிப்படைக்காரணமாக விளங்குவதால் தம்மால் ஒருபோதும் ஒற்றையாட்சி முறைமையை ஏற்றுக்கொள்ள முடியாதென கனேடிய உயர்மட்டப்பிரதிநிதி மேரி-லூயிஸ் ஹனனிடம் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டாக தெரிவித்துள்ளனர்
தமிழர் தரப்பு சமஸ்டித்தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமான வலுவான அழுத்தங்களை கனடா பிரயோகிக்கவேண்டும் எனக் அவர்கள் கனடாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
சமஸ்டி முறைமை தொடர்பில் சிங்கள மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு அவசியமான நிதியளிப்பையும் கனடாவிடம் கேட்பதற்கு தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மறந்துவிடவில்லை
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு புதன்கிழமை (22) நாட்டுக்கு வருகைதந்த கனடாவின் உலகளாவிய விவகாரங்கள் பிரிவின் தெற்காசியத் தொடர்புகளுக்குப் பொறுப்பான பணிப்பாளர் நாயகம் மேரி-லூயிஸ் ஹனனுக்கும், வட, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றைய தினம் மாலை 5.30 மணிக்கு கொழும்பிலுள்ள கனேடிய இல்லத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் கனேடிய உயர்மட்டப்பிரதிநிதி மேரி-லூயிஸ் ஹனனுடன் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் மற்றும் கனேடிய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் பிரிவு அதிகாரி சாகித்தியனன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
தமிழ்த்தேசியக்கட்சிகளின் சார்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், பத்மநாதன் சத்தியலிங்கம், சண்முகதாசன் குகதாசன், சாணயக்கியன் இராசமாணிக்கம், ஞானமுத்து சிறிநேசன், கவீந்திரன் கோடீஸ்வரன், இளையதம்பி ஸ்ரீநாத் மற்றும் துரைராசா ரவிகரன் ஆகியோரும்,
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனும் கலந்துகொண்டிருந்தனர்.