தைப்பொங்கல் பண்டிகை இலங்கை பாராளுமன்ற வளாகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை வைபவரீதியாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இடம்பெற்றது.
வரலாற்றில் முதன்முறையாக இலங்கை பாராளுமன்றத்தினால் கொண்டாடப்பட்ட தைப்பொங்கல் தினமாக இது கருதப்படுகிறது.
இந்நிகழ்வில் இந்துக் மதத் தலைவர்கள், அமைச்சர்கள், மற்றும் தமிழரசுக் கட்சி, ஜேவிபி இன் பராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கலாக சில பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரின் முன்மொழிவுக்கு அமைய, சபாநாயகரின் ஆலோசனையின் கீழ், புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் இந்து மத மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் பொங்கல் நடைப்பபெற்றது
பொதுமக்களுக்கு தமிழ் கலாசாரம் பற்றிய புரிதலை ஊக்குவித்தல்,தமிழ் சமூகத்தின் பாரம்பரியம் மற்றும் மரபுகளை மதித்தல், இலங்கையின் கலாசார பன்முகத்தன்மையை அங்கீகரிப்பதன் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய தேசிய அடையாளத்தை வளர்ப்பது உள்ளிட்ட நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்வில் உரையாற்றிய சபாநாயகர் குறிப்பிடுகையில், மனிதர்கள் இயற்கையுடன் எவ்வளவு நெருக்கமான தொடர்புகளுடன் இருக்கின்றார்கள் என்பதை தைப்பொங்கல் எடுத்துக் காட்டுவதாகவும், இதன் மூலம் அனைத்து இனங்களுக்கிடையேயான ஒற்றுமை மற்றும் சகவாழ்வு நிரூபிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் ஹினிதும சுனில் செனெவி கருத்துரை வழங்கியதுடன், அனைத்து இனக்குழுக்களுக்கிடையேயான ஒற்றுமைக்கு மொழித் தடையை கடக்க வேண்டும் என்றும், புதிய கல்வி சீர்திருத்தங்கள் மூலம் இதனை அடைய எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில் நடன நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன.
