பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவை இன்னும் இரு வாரங்களில் கைது செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது
ராஜபக்ஸ குடும்பத்தினரை அரசியலில் இருந்து முழுமையாக புறக்கணிக்கும் வகையில் அரசியல் பழிவாங்கல்கள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஊடக பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார்.
கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
யோசித்த ராஜபக்ஸவை நிதி சுத்திகரிப்பு தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.
ஆனால் அச்சட்டத்தின் பிரகாரம் கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை.
2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தாமல் அரசியல் பழிவாங்கல்களுக்கு முன்னுரிமை வழங்கியது போலவே தற்போதைய அரசாங்கமும் செயற்படுகிறது.
ஆகவே நல்லாட்சி அரசாங்கதினது நிலையே இந்த அரசாங்கத்துக்கும் ஏற்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஊடக பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே மேலும் தெரிவித்தார்.