பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கையின் புதிய அரசாங்கத்தரப்பிலிருந்து எந்தவொரு முன்னேற்றம் இல்லையென பிரித்தானியாவின் இந்தோ – பசுபிக் பிராந்திய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் கத்தரின் வெஸ்ட், தமிழ்ப்பிரதிநிதிகளிடம் விசனம் வெளியிட்டுள்ளார்
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று முன்தினம் திங்கட்கிழமை (27) இலங்கையை வந்தடைந்த பிரித்தானியாவின் இந்தோ – பசுபிக் பிராந்திய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் கத்தரின் வெஸ்ட் நேற்று (28-01-2025) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தார்
இதன்போது கத்தரின் வெஸ்ட்டுக்கும் தமிழ்த்தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மு.ப 11.15 மணிக்கு யாழ் ஜெட்விங்க் ஹோட்டலில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன் மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த பெரும் எண்ணிக்கையான தமிழர்கள் பிரித்தானியாவில் வாழ்வதாகச் சுட்டிக்காட்டிய கத்தரின் வெஸ்ட், அதன் காரணமாக இலங்கை தமிழர் விவகாரத்தில் தாம் பெரிதும் அக்கறை கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.
அத்துடன் பொறுப்புக்கூறல் விவகாரத்தைப் பொறுத்தமட்டில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பிரிட்டன் முன்நின்று செயற்பட்டுவருவதாகத் தெரிவித்த கத்தரின் வெஸ்ட், இதுபற்றி அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் தாம் கலந்துரையாடிய போதிலும், அவர்கள் ஓரிரு வார்த்தைகளிலேயே பதிலளித்ததாக கவலை வெளியிட்டுள்ளார்
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட தமிழ்தேசிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன் மற்றும் கஜேந்திரகுமார், ‘இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும், அதற்கு அப்பால் எவ்வித முன்னேற்றமும் அடையப்படவில்லையென தெரிவித்தனர்
எனவே இவ்விடயத்தைப் பொறுத்தமட்டில் பிரித்தானியாவும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் ஏனைய நாடுகளும் ஒன்றிணைந்து இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்வதற்குரிய கொள்கை மட்டத்திலான தீர்மானத்தை மேற்கொள்ளவேண்டும்.
அதனூடாக பொறுப்புக்கூறல் விடயத்தில் மாத்திரமன்றி, அரசியல் தீர்வு விடயத்திலும் அரசாங்கத்தின்மீது மறைமுக அழுத்தத்தைப் பிரயோகிக்கமுடியும்’ எனச் சுட்டிக்காட்டினார்.
அதனை செவிமடுத்த பிரித்தானிய அமைச்சர் கத்தரின் வெஸ்ட், பொறுப்புக்கூறல் விடயத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அப்பால் இலங்கை அரசாங்கத் தரப்பிலிருந்து குறிப்பிடத்தக்களவிலான முன்னேற்றம் எதுவும் எட்டப்படவில்லை என்பதை ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில் இவ்விடயத்தில் இலங்கை அரசாங்கத்துடன் பேணப்பட்டுவரும் அணுகுமுறையை தமது அரசாங்கம் மீளாய்வுக்கு உட்படுத்தவிருப்பதாகவும், இதுகுறித்து வெளிவிவகார அமைச்சு மட்டத்தில் ஆராய்ந்து தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.