இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே நடுக்கடலில் கச்சத்தீவு அமைந்துள்ளது.
இந்த தீவில் அமைந்துள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா ஆண்டுதோறும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் 2 நாட்கள் நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற மார்ச் 14, 15-ந்தேதிகளில் நடைபெறுகிறது.
திருவிழா அழைப்பிதழானது யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் மூலம் சிவகங்கை மறை மாவட்ட ஆயர் ராமேசுவரம் வேர்க்கோடு பங்குத்தந்தை ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வேர்க்கோடு பங்குத்தந்தை அசோக் வினோ, ராமேசுவரம் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
கூட்டத்துக்கு பின்பு பங்குத்தந்தை அசோக் வினோ கூறியதாவது:-
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா அழைப்பிதழை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து வழங்க இருக்கிறோம்.
இந்த திருவிழாவுக்கு சென்று வர அரசிடம் அனுமதி பெற்றுத்தந்து, பயண ஏற்பாடுகள் செய்து தருவது தொடர்பாக கலெக்டரிடம் கோரிக்கை வைக்க உள்ளோம்.
இந்த ஆண்டு கச்சத்தீவு திருவிழாவுக்கு 75 விசைப்படகுகளும், 16 நாட்டு படகுகளும் செல்ல உள்ளன.
2500-க்கும் மேற்பட்டோர் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
விழாவில் கலந்து கொள்பவர்களுக்கான விண்ணப்ப படிவம் வருகிற 6-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை வழங்கப்பட உள்ளது.
இந்த விண்ணப்ப படிவத்தை பிப்ரவரி 25-ந்தேதிக்குள் அனைவரும் பூர்த்தி செய்து படகு உரிமையாளர்களிடம் அல்லது விழா கமிட்டியிடம் கொடுக்க வேண்டும் என பங்கு தந்தை தெரிவித்துள்ளார்

