கனடாவில் அடுத்து நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தான் பிரதமராக தெரிவு செய்யப்பட்டால் இலங்கையில் நடைப்பபெற்ற குற்றங்களுக்காக அதனை சர்வதேச நீதிமன்றத்தலி நிறுத்துவதற்குரிய நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக கனடாவின் பிரதான எதிர்க்கட்சியான கொன்சவேட்டிவ் கட்சியின் தலைவர் பியெர் பொய்லிவ் தெரிவித்துள்ளார்.
தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கனடாவின் டொரன்டோ நகரில் ‘ஹார்வெஸ்ட் ஒஃப் ஹோப்’ எனும் மகுடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே பியெர் பொய்லிவ் இவ்வாறு கனேடிய தமிழ் சமூகத்திடம் உறுதியளித்துள்ளார்
தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலையை நிகழ்த்திய இலங்கை அரசாங்கத்தை தனிமைப்படுத்தி தண்டிக்கும் நோக்கில் 2013 ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டை கனடாவின் முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் புறக்கணித்தமையினை நினைவுக் கூர்ந்த பியெர் பொய்லிவ், கனடாவின் வளர்ச்சிக்கு தமிழ் மக்கள் ஆற்றிய பங்களிப்பினை பெரிதும் பாராட்டினார்.
அத்தோடு தமிழ் மக்களுக்கு எதிரான குற்றங்களைப் புரிந்த ராஜபக்ஸர்களையும், ஏனைய குற்றவாளிகளையும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு அவசியமான தலைமைத்துவத்தை கொன்சவேட்டிவ் கட்சியின் பிரதமரான நான் வழங்குவேன் எனவும் பியெர் பொய்லிவ் உறுதியளித்தார்.