ஜனாதிபதி, பாராளுமன்றத் தேர்தல் மூலம் சுதந்திரத்தை மேலும் நிலைநாட்டி எமது நாட்டில் வாழ்கின்ற பல்வேறு இனத்தவர்களிடையேயும் மதத்தவர்களிடையேயும் ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் விருத்தி செய்து உண்மையான நன்மைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய புதிய பாதையில் அடியெடுத்து வைத்துள்ளோம்.
அரசியல் தலைவர்கள் பொதுநலத்துடன் நாட்டைக் கொண்டுசெல்வதற்காக செயற்பட வேண்டும் என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது :
இலங்கையின் 77ஆவது சுதந்திரதினத்தையொட்டி வாழ்த்துத் தெரிவிப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.
நீண்ட போராட்டத்தின் பின்னர், வெளிநாட்டு ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகள் வெற்றியடைந்து, நாங்கள் 1948 பெப்ரவரி மாதம் 4ஆம் திகதியன்று சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டோம்.
ஆனாலும், அது வெறுமனே அரசியல் ரீதியாகப் பெற்றுக் கொண்ட சுதந்திரம் மாத்திரமேயாகும் .
அதற்குக் காரணம், அன்று தொடக்கம் இன்று வரை எமது நாட்டில் ஆட்சிபுரிந்த ஒருசில தலைவர்களின் பலவீனங்களால் எமது நாடு பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் சீரழிவுப் பாதையில் பயணிக்க ஆரம்பித்தது.
நாங்கள் பெற்றுக்கொண்ட சுதந்திரம் எம்மைவிட்டு விலகுகின்ற சூழ்நிலையைக் கடந்தகாலங்களில் காணக்கூடியதாக இருந்தது.
அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் மூலம் பெற்றுக் கொண்ட சுதந்திரத்தை மேலும் நிலைநாட்டி எமது நாட்டில் வாழ்கின்ற பல்வேறு இனத்தவர்களிடையேயும் மதத்தவர்களிடையேயும் ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் விருத்தி செய்து உண்மையான நன்மைகளைப் பெற்றுக் கொள்ளக்கூடிய புதிய பாதையில் அடியெடுத்து வைத்துள்ளோம்.
நாங்கள் அனைவரும் எமது நாட்டை முதலிடத்தில் முன்னிறுத்தி, உயர்த்தி வைப்பதற்காக செயற்படும் போதுதான் இவ்வெற்றியை எங்களுக்கு அடைந்து கொள்ள முடியும். எமது நாட்டின் பிரதான அரசியல் தலைவரான ஜனாதிபதி காட்டுகின்ற முன்மாதிரியான செயல்கள் பாராட்டுதலுக்குரியதாகும்.
அனைத்திற்கும் முதன்மையாக தாய்நாட்டுக்குப் பற்றுக்கொண்ட நேர்மையான, சட்டத்தை மதிக்கின்ற, பண்புள்ள, தன்னை விடவும் தான் சேவையாற்றும் மக்களை நேசிக்கின்ற தலைமைத்துவமே எங்களுக்குத் தேவையாகும்.
ஜனாதிபதியின் முன்மாதிரியான செயல் மிகவும் முக்கியமானதாகும். அதற்கமைய முன்னோக்கிப் பயணித்து எமது நாட்டின் ஆட்சியில் பங்கெடுக்கின்ற அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் சேவை வழங்குகின்ற அதிகாரிகளும் நீதியாகவும், நேர்மையாகவும், ஒழுக்கமாகவும் சிறந்த எதிர்காலத்திற்காகப் பொதுநலத்துடன் நாட்டைக் கொண்டு செல்வதற்காக செயற்பட வேண்டும்.
அவ்வாறான மனப்பாங்கு ரீதியான மாற்றத்தால் மாத்திரமே, எமது நாடு பெற்றுக்கொண்ட சுதந்திரத்திற்கு நிலையுறுதியான அடித்தளத்தை இடமுடியும்.
அதனால் எமது மதக் கோட்பாடுகளில் குறிப்பிட்டுக் கூறப்படுகின்ற பொதுநலமான வாழ்க்கைத் தத்துவத்தின் மூலம் எமது தாய்த்திருநாடு பெற்றுக்கொண்ட சுதந்திரத்தை மேலும் விரிவாக்கம் செய்வதற்கு நாட்டு மக்களாகிய நாம் அனைவரும் எங்களை அர்ப்பணித்தல் வேண்டும். அதற்காக இன்றைய சுதந்திர தினத்தில் நாம் அனைவரும் திடசங்கற்பம் பூணுவோம். அது எமது நாட்டுக்கு அளப்பரிய ஆசிர்வாதமாக அமையும். எமது தாய்நாட்டுக்கு என்றுமே வெற்றி கிட்டட்டும் என தெரிவித்துள்ளார்.