அடக்குமுறைகளை கைவிட்டு அரசாங்கம் ஜனநாயக முறையில் செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று ஒழுங்கு பிரச்சினை ஒன்றை எழுப்பி குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
அரசாங்கம் கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் தோல்வியை சந்தித்து வரும்போது அடக்கு முறைகளை கையாண்டு வருகிறது. கம்பஹாவில் அது இடம்பெற்றுள்ளது.
அதேபோன்று கம்புறுப்பிட்டியவில் அமைதியான முறையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் இடம்பெறும்போது அங்கும் அடக்குமுறை இடம்பெற்றுள்ளது.
பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் சர்வதேச நாணய நிதியத்தின் நிலைப்பாட்டுக்கு எதிராக கூட்டம் நடத்த முற்பட்டபோது, நாணய நிதியத்துக்கு எதிரான கூட்டங்களை பல்கலைக்கழகத்தில் நடத்த முடியாது என பல்கலைக்ழக உபவேந்தர் கடிதம் அனுப்பி இருக்கிறார். இது ஜனநாயக விரோத செயற்பாடாகும்.
பாராளுமன்றத்தின் சம்பிரதாயங்கள், சிறப்புரிமைகள், நிலையியற் கட்டளைகள் சகலதும் இன்று மீறப்பட்டு வருகின்றன.
சிறப்புரிமை பிரச்சினையொன்றிற்காக, சபாநாயகருடனும், சபை முதல்வருடனும் மற்றும் ஜனாதிபதியுடனும் சந்தித்தும் தொலைபேசி வாயிலாகவும் கலந்துரையாடினோம்.
குறித்த பிரச்சினைக்கு இதுவரை தீர்வு கிடைக்காத காரணத்தினால் தான் சபையில் இதனை எழுப்புகிறோம்.
நிலையியற் கட்டளைகள், சம்பிரதாயங்கள், ஒழுங்குவிதிகள் குறித்து சபாநாயகர் பேசினாலும், இந்த சம்பிரதாய ஒழுங்குகள் இன்று பின்பற்றப்படுவதில்லை.
சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏர்ஸ்கின் மே மற்றும் கவுலன் ஷட்லர் போன்ற விதிகள் மற்றும் மரபுகளைக் கொண்ட புத்தகங்களைப் படிக்குமாறு பரிந்துரைக்கிறேன்.
வெளிநாட்டு தூதுவர்களுக்கு முன்னால் பாராளுமன்ற நட்புறவுச்சங்க தலைமை பதவிக்கும் வாக்கெடுப்பு நடத்துமாறு கோரிக்கை விடுத்தனர். இது பாராளுமன்ற சம்பிரதாயம் அல்ல. அதனால் முற்போக்காக செயற்பட வேண்டும் என்றார்.