முக்கிய செய்திகள்

சட்டவிரோத தையிட்டி விகாரை விவகாரம் ஒட்டுமொத்த தமிழர் விவகாரம் என்பதனை தமிழர்கள் உணரவேண்டும் – அருட்தந்தை மா.சத்திவேல்

தையிட்டி விகாரை பிரச்சினை என்பது ஒட்டுமொத்த தமிழர்களின் பிரச்சினை என்பதை உணராவிடில் பாரிய ஆபத்திற்கே இட்டுச் செல்லும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் திங்கட்கிழமை (10.02.2025) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசமான தையிட்டியில் தமிழர்களின் அரசியலுக்கு சவால் விட்டும் ஆக்கிரமிப்பின் நோக்கத்தோடும் படையினர் திஸ்ச விகாரையும், தூபியையும் அமைத்துள்ளமை சட்ட விரோதமானது மட்டுமல்ல அது மனித நீதிக்கும், மக்களின் அமைதி வாழ்வுக்கும், சமாதானத்திற்கும், நாட்டின் அரசியல் செல்நெறிக்கும் எதிரானதோடு இறை நீதிக்கும் எதிரானதாகும் என்பதால் சமய அமைப்புகளும் அதன் தலைமைத்துவங்களும் விசேடமாக வடகிழக்கில் இருக்கும் சமய அமைப்புகளும் சமய தலைமைத்துவங்களும் இனியும் மௌனம் காக்காது தான் சார்ந்த சமயநெறி நின்று மக்களின் சார்பெடுத்து இறைநீதி குரல் எழுப்ப வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றோம்.

யுத்த காலத்தில் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசங்களில் படையினரால் புரியப்பட்ட சட்ட விரோத செயற்பாடுகள், கொலைகள், காணாமலாக்குதல் தொடர்பில் மக்கள் நீதி கேட்டு வீதியில் நிற்கின்றனர். மேலும் சர்வதேச கதவுகளையும் தட்டுகின்ற நிலையில் சமய அமைப்புகளும் மக்களுக்கு தூரமாகவே நிற்பதை அவதானிக்கின்றோம்.

ஆனால் ஒரு சில சமய அருட் தொண்டர்கள் துணிச்சலோடு மக்களோடு நின்று குரல் எழுப்புகின்றனர். இன்னும் சிலர் உயிர் தியாகிகளாகியுள்ளனர். அவர்களை பாராட்டுவதோடு அவர்கள் வரலாற்றில் பதியப்பட்டவர்களாவர். இவர்களை சமய அமைப்புகளும், அதன் தலைமைத்துவங்களும் உரிய அங்கீகாரம் அளிக்காமை வேதனை அளிக்கின்றது.

தற்போதைய சூழ்நிலையில் தையிட்டி விகாரை பிரச்சினை என்பது அக்கிராம மக்களின் பிரச்சினையோ,அது அமைந்துள்ள தனியார் காணி உரிமையாளர்கள் பிரச்சினையோ, அல்லது ஏதோ ஒரு கட்சி கட்சியின் பிரச்சினையோ அல்ல. இது ஒட்டுமொத்த தமிழர்களின் பிரச்சினை. தமிழர் தாயக பிரச்சினை. நாட்டின் அரசியல் பிரச்சினை என்பதை உணராவிடில் பாரிய ஆபத்திற்கே இட்டுச் செல்லும் கவனத்திற் கொள்ள வேண்டும்.

எழுந்துள்ள விகாரை பிரச்சினை கடந்த காலங்களில் படையினர் புரிந்த மனித படுகொலைகளையும் மேவிய அரசியல் கொலை அடையாளமாகும். அரச பயங்கரவாதம் புத்தரின் தர்ம உபதேச கொள்கைகளையும், கோட்பாடுகளையும் குழி தோண்டி புதைத்து விட்டே நாட்டின் நடைமுறை சட்டங்களுக்கு எதிராக சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பு மனநிலையினின்று துணிச்சலோடு இதனை கட்டி எழுப்பியுள்ளது. இதற்கு எதிராக உண்மையான சமய தலைமைத்துவங்கள் இனம், மொழி, சமயம் கடந்து நீதி குரல் எழுப்ப வேண்டிய காலம் இது.

ஒரு இனத்தை ஒடுக்கவும், அவர்களின் இருப்பை அழிக்கவும், அரசியல் அபிலாசைகளை எதிர்பார்ப்பை சிதைக்கவும் எந்த ஒரு சமயமும் தம் அடையாளங்களை பாவிப்பதையும், ஆக்கிரமிப்புக்காக நிறுவுவதையும் அங்கீகரிக்க முடியாது.

அது எந்த வடிவில் நிகழ்ந்தாலும் அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய சமயம் தார்மீக கடமை ஆன்மீக தலைமைகளுக்கு உண்டு. கடந்த கால தவறுகளில் தொடர்ந்து இருக்காது சமய தலைமைகள் தம் அமைப்பு சார்ந்தும், தனித்தனியாகவும் கூட்டாகவும் இறை நீதியை வெளிப்படுத்த ஒன்றிணைய வேண்டும்.

தற்போதைய தேசிய மக்கள் சக்தியும் நாட்டின் ஜனாதிபதியும் கிளீன் ஸ்ரீலங்கா (தூய்மையான இலங்கை) தொடர்பில் அதிகம் பேசுகின்ற கலாச்சாரமாகியுள்ளது. வரவேற்கத்தக்கது. ஆனால் அது இலஞ்சம், ஊழல், அரச சொத்துக்கள் கொள்ளையிடல் மற்றும் குப்பை குளங்கள் தொடர்பாக மட்டும் இருக்கக் கூடாது.

அரச பயங்கரவாதத்தையும் அதன் இன சமய கலாச்சார ஆக்கிரமிப்பு அழிப்பு என்பவற்றையும் சிங்கள பௌத்த ஆதிக்க வாதத்தையும் தடுத்து நிறுத்துவதும் கிளீன் சிறிலங்காவுக்குள் உள்ளடக்குதல் வேண்டும். இதற்கும் சமய தலைமைத்துவங்கள் ஆட்சியாளர்களுக்கு அளுத்தம் கொடுத்தல் வேண்டும்.

இதன் மூலமே நாட்டின் நல்லிணக்கத்தை கட்டி எழுப்ப முடியும். சமயத்தை காக்கவும் முடியும். அரசியல் நீதி இல்லாதவிடத்து அதற்கு எதிராக குரல் கொடுக்க முடியாவிடில் சமயம் வாழாது. வளராது என்பதையும் நினைவில் கொள்வோம்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் முக்கிய செய்திகள்

சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் தொடர்பில் அச்சமடைய தேவையில்லை

இத்தினங்களில் சீனாவில் பரவி வரும்  HMPV வைரஸ், கடந்த காலங்களில் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்ட வைரஸ் நோய் நிலைமையாகும் என வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த
உள்ளூர் முக்கிய செய்திகள்

அநுர அரசுக்கு சவால் விடுத்த முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன!

அரசாங்கம் நாட்டை ‘சுத்தம்’ செய்யப் போகிறது என்றால் முதலில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தங்களில் உள்ள மோசடிகளை சுத்தம் செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் பந்துல