தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ்நிலையம் உள்ளிட்ட இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
பூந்தமல்லி பஸ்நிலையத்தில் காவல் உதவி செயலியின் பயன்பாடு குறித்து மாணவிகள் பெண்களிடையே விழிப்புணர்வு செய்யப்பட்டது.
இதில் ஆவடி போலீஸ் கமிசனர் சங்கர் கலந்து கொண்டு பெண்களிடையே காவல் உதவி செயலி குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்தார்.
அப்போது பெண்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் விதமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள காவல் உதவி செயலியை பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்து அதன் பயன்பாடு குறித்து பள்ளி-கல்லூரி மாணவிகள் மற்றும் பணிக்கு செல்லும் பெண்களிடையே செயல்முறை விளக்கம் அளித்தார்.
அப்போது ஏராளமான பெண்கள், மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று காவல் உதவி செயலியை தங்களது செல்போனில் பயன்படுத்த பதிவிறக்கம் செய்து கொண்டனர். இதைத் தொடர்ந்து பெண்கள் பாதுகாப்பு குறித்து கமிஷனர் சங்கர் துண்டு பிரசுரம் வழங்கினார்.
இதேபோல் கூடுதல் போலீஸ் கமிஷனர் பவர்னீஸ்வரி, போக்கு வரத்து துணை போலீஸ் கமிஷனர் அன்பு ஆகியோர் ஆவடி, திருவேற்காடு பஸ்நிலையத்தில் பஸ்சில் பயணம் செய்து பெண்களிடையே துண்டு பிரசுரம் வழங்கி காவல் உதவி செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். செங்குன்றம் பஸ்நிலையத்தில் துணை கமிஷனர்கள். மகேஷ்வரன், பால கிருஸ்ணன் ஆகியோர் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

