காற்றாலை மின்திட்டம் குறித்து இந்தியாவின் அதானிகுழுமமும் இலங்கை அரசாங்கமும் அடுத்தவாரம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையின் காற்றாலை மின் திட்டத்தை முன்னெடுப்பதிலிருந்து விலகிக்கொள்வதாக அதானி குழுமம் உத்தியோகபூர்வமாகஅறிவித்துள்ள நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை அரசாங்கமும் அதானிகுழுமமும் அடுத்தவாரம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளன இதன் மூலம் காற்றாலை மின் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகள் முற்றாக பூர்த்தியாகவில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளன என டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.
இருதரப்பும் அடுத்தவாரம் மூடியகதவுகளிற்குள் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு இணக்கப்பாட்டிற்கு வரமுடியுமா என பார்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கை இந்திய அரசாங்கங்கள் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து ஏற்கனவே 14 சுற்றுப்பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அனுமதி வழங்குவதில் ஏற்படும் தாமதம் குறித்து இந்திய தரப்பு அதிருப்தி வெளியிட்டமையும் குறிப்பிடத்தக்கது.
எனினும் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டவேளை அதானிகுழுமத்தின் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள தயார் என தெரிவித்திருந்த அதேவேளை நிறுவனம் முன்வைத்த கட்டணங்கள் குறைக்கப்படவேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.