இலங்கையுடன் தமது உறவை மேலும் வலுபடபடுத்த மாலைதீவு விரும்புகிறது என மாலைத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் டொக்டர் அப்துல்லா கலீல் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹேரத் சந்தித்த பின், செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த மாலைத்தீவு அமைச்சர், இலங்கை நிலைத்த பொருளாதார வளர்ச்சி நோக்கி செல்வது மகிழ்ச்சியளிக்கின்றதென தெரிவித்தார்.
வெளியுறவுத்துறை அமைச்சரின் விஜயத்தின் போது, பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு, சுற்றுலா, சுற்றுச்சூழல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கல்வி மற்றும் தொழிற்பயிற்சி, மீன்பிடி, சுகாதாரம், இளைஞர் முன்னேற்றம், விளையாட்டு,;, பிராந்திய மற்றும் பன்னாட்டு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விரிவான கலந்துரையாடல்கள் நடைபெற்றதாகவும் அவர் கூறினார்.
‘மாலைத்தீவின் சமூக-பொருளாதார வளர்ச்சியில் இலங்கை அளித்த அளவற்ற பங்களிப்புக்கு மாலைத்தீவு அரசு மற்றும் மக்கள் நன்றியுடன் இருக்கின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பல்வேறு துறைகளில் இலங்கை தொடர்ந்து எங்களுடன் இணைந்து செயல்படுகிறது.
மேலும், மாலைத்தீவின் பொருளாதார வளர்ச்சியில் இலங்கையர்களின் பங்களிப்பு மிகவும் மதிப்பிற்குரியது’ என்று மாலைத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கையில் மாலைத்தீவின் பெரிய குடியேற்ற சமூகமானவர்கள் வாழ்ந்து வருவதுடன், இலங்கை பொருளாதாரத்திற்கும் பங்களிக்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
‘இலங்கை பல மாலைத்தீவுக்காரர்களின் இரண்டாவது வீடாகும்.
இலங்கையில் வசிக்கும் மற்றும் சுற்றுலா வரும் மாலைத்தீவுக்காரர்களுக்கு நல்வரவளிக்கும் இலங்கை மக்களுக்கும் அரசுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.
நமது சமூகங்களை பாதிக்கும் சவால்களை தீர்க்க, ஒன்றிணைந்து பணியாற்றுவோம்’ என்றும் அவர் கூறினார்.
இருநாட்டு தனியார் துறைகள் இணைந்து பணியாற்ற, புதிய வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்ந்து வளர்த்துக்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளதாகவும் இரு அமைச்சர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.