முக்கிய செய்திகள்

தேர்தல் காலத்தில் அரசியலமைப்பு உருவாக்கம் பற்றி பேசியவர்கள் இப்போது அதனை கிடப்பில் போட்டுள்ளதாக சிறிதரன் எம்பி குற்றச்சாட்டு

ஜனாதிபதித் தேர்தலில் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் பற்றி பேசப்பட்டது. ஆனால், தற்போது அது கிடப்பில் போடப்பட்டது. போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம் என்று குறிப்பிட்ட ஜே.ஆர்.ஜயவர்தன 1995ஆம் ஆண்டு மரணப்படுக்கையில் வடக்கு – கிழக்கு இன முரண்பாட்டுக்கு சமஸ்டி சிறந்த தீர்வு என்று குறிப்பிட்டார்.

அரசாங்கத்துக்கு சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. சந்தர்ப்பத்தை சிறந்த முறையில் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (18-02-2025) நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் முதல் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

வரவு – செலவுத் திட்டத்தில் இந்த ஆண்டுக்கான அரச செலவினம் 4218.2 பில்லியன் ரூபா என்று ஜனாதிபதியினால் செலவு விபரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
ஆனால், வரவுக்கான வழி என்ன என்பது தொடர்பில் தெளிவாக கூறப்படவில்லை.
100 வீத செலவில் 69 வீதமானவை நடைமுறை செலவுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
31 வீதமானவை மட்டுமே முதலீடுகளாக உள்ளன.

நாட்டின் பொருளாதாரம் மூலதன செலவுகள் ஊடாகவே கட்டியெழுப்பப்பட வேண்டும்.

நாட்டின் மிக நெருக்கடியான நேரத்தில் பொறுப்பேற்றுள்ள அரசாங்கம் இது தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.

குறிப்பாக பாதுகாப்பு செலவுக்கு மொத்த வரவு – செலவுத் திட்டத்தில் 11 வீதம் ஒதுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் யுத்தம், சண்டை இல்லாத நேரத்தில் 442 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இன்னும் பெரும்பாலான மக்கள் குடியேற்றப்படவில்லை. மக்களின் காணிகள் விடுவிக்கப்படவில்லை.

தமிழர் நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ள நிலையில், மிதமிஞ்சிய இராணுவ ஆளனியுடன் இருக்கும் இலங்கையில் 11 வீதம் இராணுவத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளமை இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உகந்ததல்ல. அதற்கான எதிர்ப்பையும் பதிவு செய்கின்றோம்.

இதேவேளை இந்த நாட்டில் பொருளாதாரம் வளர்ச்சி பெற வேண்டுமாயின் இனங்களுக்கு இடையிலான ஒற்றுமை பலமாக்கப்பட வேண்டும்.
வளமான இலங்கையை கட்டியெழுப்ப புலம்பெயர் இலங்கையர்களே வாருங்கள் என்று ஜனாதிபதி அழைத்துள்ளார்.

அவர்களின் தொடர்பை ஜனாதிபதி விரும்புகிறார். ஆனால், இந்த மண்ணில் நீண்ட காலமாக புரையோடிப் போயுள்ள தமிழர்களின் பிரச்சினை தொடர்பில் அரசாங்கத்தில் உள்ளவர்கள் பேசுவதற்கு தயங்குகின்றனர்.

சிங்கப்பூர், ஜப்பான், கொரியா போன்ற நாடுகள் இலங்கையை போன்று முன்னேற்றமடைய வேண்டும் என்று ஒருகாலத்தில் குறிப்பிட்டது.

ஆனால், இலங்கை 1940இல் எப்படி இருந்ததோ அப்படியே இன்றும் நாடு இருக்கிறது.
எனினும், குறித்த நாடுகள் இப்போது இலங்கைக்கே கடன் கொடுக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளன. அதற்கு காரணம், அந்த நாடுகளின் ஒற்றுமையும் வளமுமே ஆகும்.

இந்நிலையில் புலம்பெயர்ந்தோரே வாருங்கள் என்று அழைப்பு விடுக்கும்போது இந்த நாட்டில் தமிழரின் அடிப்படை உரிமைகள் தமது தேசத்தில் தேசிய இனமாக அடையாளப்படுத்தும் உரிமையை இந்த நாடு எவ்வாறு வழங்கப்போகிறது என்ற கேள்விகள் அவர்களிடத்தில் உள்ளன.

இந்த நாட்டில் சமஷ்டி தொடர்பில் பேசி 2026ஆம் ஆண்டில் நூறு ஆண்டுகளாகிவிடும். 1926ஆம் ஆண்டில் பண்டாரநாயக்க எழுதிய கட்டுரைகள் சமஷ்டி தொடர்பில் குறிப்பிட்டிருந்தன. ஆனால், 1956ஆம் ஆண்டில் பண்டா செல்வா ஒப்பந்தத்துக்கு முன்னர் குறிப்பிட்ட கட்டுரைகளின் மூலம் சமஷ்டி தொடர்பில் குறிப்பிட்டிருந்தார்.

தந்தை செல்வாவும் இது தொடர்பில் உரைகளை நிகழ்த்தியிருந்தார். சிங்கள தேசிய இனத்தின் அடையாளம் மற்றும் நிலம் எவ்வளவு முக்கியமோ அதேபோன்று இந்த மண்ணில் தோன்றி வளர்ந்த தமிழ்த் தேசிய இனத்தை அங்கீகரிக்காத வரையில் இந்த நாட்டின் தூய்மையான பயணங்களை எவ்வாறு கொண்டு செல்லப் போகின்றீர்கள் என்ற கேள்விகள் உள்ளன.

நாங்கள் எங்கள் கரங்களை உங்களுடன் கோர்த்துக்கொள்ள விரும்புகிறோம். இரு கரங்களும் இறுகப் பற்றிக்கொள்ளப்பட வேண்டும். ஆனால், இந்த நாட்டில் சமமான பிரஜைகளாக வாழ கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதே தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டன என்பதனை புரிந்துகொள்ளுங்கள்.

தமிழர்கள் சம உரிமைகளை கேட்டபோதே வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. இது போன்று பல சம்பவங்கள் நடந்துள்ளன. நீரு பூத்த நெருப்பை போன்றே இனப்பிரச்சினை உள்ளது.

தமிழரின் கோரிக்கைகளை மழுங்கடிக்கச் செய்யாதீர்கள். நாட்டில் நீங்களும் நாங்களும் சேர்ந்து வாழ வேண்டும். சமாதானத்தை அடையும் தூரம் நீண்டதாக தெரிகிறது.

அதனை நெருக்கமாக கொண்டுவாருங்கள். உங்களின் காலத்தில் அதனை செய்ய முடியுமென்ற நம்பிக்கையை கொண்டு வாருங்கள்.

நாங்கள் பல தடவைகள் ஏமாற்றப்பட்டமையினாலேயே உங்கள் மீதான நம்பிக்கையை இழந்திருக்கிறோம்.

1987இல் கொண்டுவரப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தம் நாட்டில் இப்போதும் நடைமுறையில் இல்லை. இன்றும் அவை கிடப்பில் உள்ளன. இணைந்த வடக்கு, கிழக்கை உங்களின் ஜே.வி.பியினரே வழக்கு தொடர்ந்து பிரித்தனர். ஆனால், சமாதானத்தின் கதவுகளை திறக்கும் சாவி உங்கள் கையில் உள்ளது. இது உங்களின் பொறுப்பாகும்.

மகிந்த ராஜபக்ஷவின் காலத்தில் பல்லின வல்லுனர் குழு அதிகார பகிர்வு பற்றி பேசியது. 2009இல் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் மகிந்த ராஜபக்ஷவுக்கு மிகப் பெரிய வாய்ப்பு கிடைத்திருந்தது.

அவர் நினைத்திருந்தால் அப்போது அதிகாரப் பகிர்வுடன் கூடிய சமஷ்டியை வழங்கியிருந்தால் சிங்கள மக்கள் அதனை எதிர்த்திருக்க மாட்டார்கள்.

அதேபோன்ற வாய்ப்பொன்று இன்று உங்களின் கைகளில் உள்ளது. சிங்கள மக்கள் உங்களை நம்புகின்றனர். இந்த நம்பிக்கையூடாக சமாதான யுகத்தை ஆரம்பியுங்கள். நீங்கள் சமஸ்டி அடிப்படையிலான தீர்வினை கொண்டு வாருங்கள். அதனை பெரும்பான்மையானவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். அதற்கான வாய்ப்பாக இந்த காலத்தை பயன்படுத்துங்கள்.

போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம் என்று குறிப்பிட்ட முன்னான் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன, 1995ஆம் ஆண்டு மரணப்படுக்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண இன முரண்பாட்டுக்கு சமஷ்டி முறைமையிலான தீர்வு சிறந்தது என்று குறிப்பிட்டிருந்தார்.

2015 மார்ச் மாதம் 13ஆம் திகதி இலங்கைக்கு வருகைதந்த பாரத பிரதமர் நரேந்திர மோடி, கூட்டு சமஸ்டி முறைமை இலங்கைக்கு சிறந்ததாக அமையும் என்று குறிப்பிட்டிருந்தார். ஆகவே, தற்போதைய அரசாங்கத்துக்கு சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த அரிய வாய்ப்பை சிறந்த முறையில் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் முக்கிய செய்திகள்

சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் தொடர்பில் அச்சமடைய தேவையில்லை

இத்தினங்களில் சீனாவில் பரவி வரும்  HMPV வைரஸ், கடந்த காலங்களில் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்ட வைரஸ் நோய் நிலைமையாகும் என வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த
உள்ளூர் முக்கிய செய்திகள்

அநுர அரசுக்கு சவால் விடுத்த முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன!

அரசாங்கம் நாட்டை ‘சுத்தம்’ செய்யப் போகிறது என்றால் முதலில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தங்களில் உள்ள மோசடிகளை சுத்தம் செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் பந்துல