உள்ளூர் முக்கிய செய்திகள்

மன்னாரில் கனிய மணல் அகழ்வை தடுப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டுமென சிவகரன் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்

இந்த நாட்டில் ஜனநாயகப் போராட்டத்தின் மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு ஏற்பட்டது. மக்கள் சக்தி வலிமையானது. எனவே, மன்னார் தீவுப் பகுதியில் காற்றாலை, கனிய மணல் அகழ்வு (டைட்டானியம்) கரையோர மண் அகழ்வு ஆகிய மூன்று திட்டங்களையும் முழுமையாக நிறுத்த வேண்டும் என்பதே எமது கோரிக்கை. ஆகவே, எமது கோரிக்கையை புரிந்துகொண்டு துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் ஜனாதிபதிக்கு இன்று அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

மன்னார் தீவு பகுதியின் எதிர்காலம் மனிதர்கள் வசிப்பது கேள்விக்குள்ளாகப் போகிறது. ஆரோக்கியமான சுற்றுச் சூழலில் மனிதர்கள் வசிக்க முடியாத சூழ்நிலையில் அபிவிருத்தி எதற்காக?

இந்த உலகத்தில் இயற்கைக்கு அப்பால் மனிதர்களாலேயே யாவும் மனிதர்களுக்காக உருவாக்கப்பட்டது.

அது மனிதர்களுக்கு எதிராக மாறுமாக இருந்தால் அது பயனற்றது. இந்த யதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும்.

இயற்கை வளச் சுரண்டல் மனிதர்களின் வாழ்வியல் இருப்பை ஏற்புடையதாக்காது. மன்னார் தீவு ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது தரைத் தோற்றத்தை விட மிகவும் தாழ்வானது.

இயற்கை அனர்த்தத்தை தாங்கும் திறன் கொண்டதாக அதன் கட்டமைப்பு இல்லை என்பது துறை சார்ந்த ஆய்வியலாளர்களின் கருத்தாக உள்ளது. அதனால்தான் மன்னாரில் மூன்று மாடிக்கு மேல் கட்டடம் கட்டுவதற்கு அனுமதி வழங்குவதில்லை.

எனவே தீவுப் பகுதியில் காற்றாலை, கனிய மணல் அகழ்வு (டைட்டானியம்), கரையோர மண் அகழ்வு ஆகிய மூன்று திட்டங்களையும் முழுமையாக நிறுத்த வேண்டுமென பொது மக்களின் சார்பில் சிவில் அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்துகின்றன.

இவை செயற்படுத்தப்பட்டால் மன்னார் தீவுப் பகுதியில் வசிக்க முடியாத நிலைமை எதிர்காலத்தில் ஏற்படும். மழை விட்டு ஒரு மாதம் கடந்தும் மழை நீர் ஓட முடியாமல் தேங்கி நிற்கிறது. அதனால் சிறு, குறு, குடிசைக் கைத்தொழில் யாவும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் விவசாயமும் அழிவடைந்துள்ளன. இதனால் பிரதான தொழிலாகிய மீன்பிடியும் பாதிக்கப்படுகிறது.

விஞ்ஞான ரீதியான அறிக்கைகள் என்பது மனிதன் உயிரிழக்கும் வரை காரணகாரியம், தொழில்நுட்ப ரீதியாக படித்தவர்கள் என கூறுபவர்கள் கூறிக்கொண்டே இருப்பார்கள்.

மிகச் சிறந்த உதாரணம், வலுக்கட்டாயமாக போடப்பட்ட கொரோனா ஊசியை தயாரித்த கம்பெனிகளே பக்க விளைவுகள் இருப்பதாக கூறுகின்றன. அந்த விளைவுக்கு யார் பொறுப்பேற்பது?

உலகில் இயற்கையை மதிப்பீடு செய்ய எவராலும் முடியாது. அப்படி இருந்தால் இந்த உலகத்தில் இயற்கை அனர்த்தமே உருவாகாது.

படித்தவர்கள் என்று கூறப்படுபவர்களின் தவறான முகாமைத்துவத்தினால் தான் இந்த நாடே திவாலானது. எமது கோரிக்கையை மனித வாழ்வியலின் உணர்வுத் திறனாக பார்க்க வேண்டும். ஆனால், வழக்கமான வடகிழக்கு – தெற்கு இனவாத ரீதியான அடக்குமுறை செயற்பாடாகவே அரசு இதனையும் அணுகுகிறது. எமது ஜனநாயக குரலுக்கு செவிமடுப்பதாக இல்லை.

துறை சார்ந்த திணைக்களங்கள் எம்மை எதிரிகளாகவும் துரோகிகளாகவும் அணுகுகின்றன.

எந்தத் திட்டத்தையும் மக்கள் விருப்பமின்றி செயற்படுத்த முடியாது. அவ்வாறு செயற்படுத்த முனைவது ஜனநாயக விரோதமாகும். நாம் காற்றாலைக்கு எதிரானவர்கள் அல்லர்.

மன்னார் தீவுக்கு வெளியே மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படாத இடத்தில் காற்றாலை அமைக்கலாம். தாங்கள் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மன்னார் காற்றாலை திட்டத்தை உடனடியாக நிறுத்துவோம் என வாக்குறுதி வழங்கினீர்கள். அந்த வாக்குறுதி என்னவாயிற்று?

ஆகவே, எமது கோரிக்கை மறுக்கப்பட்டால் மன்னார் தீவுக்குள் மூன்று திட்டத்தையும் செயற்படுத்த மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். தொடர்ந்து ஜனநாயக போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இந்த நாட்டில் ஜனநாயகப் போராட்டத்தின் மூலம் ஆட்சிக் கவிழ்ப்பே ஏற்பட்டது. மக்கள் சக்தி வலிமையானது. ஆகவே, எமது கோரிக்கையை புரிந்துகொள்வீர்கள் என நம்புகின்றோம் என்றுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்