வைத்தியர் முரளி வல்லிபுரநாதன் அண்மையில் எழுதிய கட்டுரையொன்றை வாசிக்க நேர்ந்தது. அதிலிருக்கும் சில கேள்விகளுக்கான பதில்களை பெறும் நோக்கில் எழுதப்பட்ட கருத்துக்களே இவை
இலங்கையை வலதுசாரிகளோ அல்லது இடதுசாரிகளோ தான் ஆட்சி செய்வார்கள் என்பது நாமனைவரும் அறிந்ததே. வைத்தியர் முரளி வல்லிபுர நாதன் தெரிவித்துள்ள கருத்துடன் முற்றாக ஒத்துப்போக முடியாதது.
ஒரு நாகரிகமான மனித சமூகம் அவ்வாறு ஒத்துப்போகாது, அதற்காக முரளி வல்லிபுர நாதனின் எல்லா கருத்துக்களையும் எதிர்க்கவேண்டிய தேவையும் இல்லை.
இதுவரையிலான மாற்றங்களின் அடிப்படையில் வடகிழக்கு மக்கள் இன்னும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
ஆகவே இதுவரை வடகிழக்கு மக்கள் எவ்வாறான எச்சரிக்கையுடன் இருந்தார்கள் என்பதனை அவர் குறிப்பிட்டு காட்ட தவறியுள்ளார். அவ்வாறு சுட்டிக்காட்டினால் மட்டுமே அவரது இலக்கான கோவணம் கழட்டப்படாமல் வடகிழக்கு மக்கள் தம்மை தற்காத்துக்கொள்வார்கள்.
மேலே கூறியவாறு மட்டுமல்ல, ஆழமாகப் பார்த்தாலும் இதுவரை வெளியான வரவுசெலவு திட்டங்களில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வரவு செலவு திட்டமானது ஒப்பீட்டளவில் சிறந்தது எனலாம்; வடகிழக்கு மட்டுமல்ல, மலையக மக்களுக்கும் ஒப்பீட்டளவில் சிறந்தது என்று கூறலாம். படையினரின் சம்பளத்தில் பெரும்பகுதி மீண்டெழும் செலவீனமே ஆகும், அதனை எந்த அரசும் தவிர்க்க முடியாது.
நாட்டின் சனத்தொகையுடன் ஒப்பிடும் போது, சிங்கபூர், இஸ்ரேல், சூடான் போன்ற நாடுகளில் படையினர்கள் அதிகமாக இருக்கின்றனர்.
சிங்கள தேசத்திற்கு எதிராக தமிழர்கள் படைகட்டி 30 வருடங்களாக ஆயுதவழி மொழி ஊடாகவும், தமிழர்களின் பிரச்சினைகளை அவர்களுக்கு சொல்லி உள்ளதாலும், அந்த கடந்தகால கசப்பான அனுபவங்களின் வெளிப்பாடாக சிங்கள தேசம் எப்போதும் படைபலத்தை தக்கவைத்துக்கொள்ளும் என்பது வெள்ளிடைமலை.
தமிழீழ விடுதலைப்புலிகளின் மீளுருவாக்கம் சாத்தியமே என்ற புலம்பெயர் தமிழர்களின் கோசமும், நிலத்தில் உள்ள தமிழர்களுடன் இந்தியாவின் அரசியல் செயற்பாடுகளும், சிறிலங்காவின் படையினரை எப்போதும் பலத்துடன் வைத்திருக்க வேண்டுமென்ற மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தாது.
இருந்த போதும், கல்வித் துறைக்கு 604 பில்லியன் ரூபாவினை அநுர அரசு பாதீட்டில் ஒதுக்கியுள்ளது என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். நல்லாட்சி அரசாங்கத்துடனான தேன்னிலவு காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வரவு செலவு திட்டங்களுக்கு வாக்களித்திருந்தனர்.
மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின் வரவு செலவு திட்டங்கள் வடகிழக்கு மக்களுக்கு வாய்ப்பாக இருந்ததா? அல்லது அப்போது மக்கள் எச்சரிக்கையுடன் இருந்தாரா என்ற கேள்வியை, வைத்தியர் முரளி வல்லிபுர நாதனிடம் எழுப்பாமல் கடக்க முடியாது.
தையிட்டி திஸ்ச விகாரை விடயத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் வழங்க வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் இந்த விவகாரம் மைத்திரிபால சிறிசேனவின் வரவு செலவு திட்டத்தில் 1000 விகாரைகளுக்கு நிதி ஒதுக்கிய போது, அதற்கு ஆதரவாக வாக்களித்த தமிழ் தேசியக் கட்சிகள் வாக்களித்த காலத்தில் இருந்து தொடங்கிய பிரச்சினையே ஆகும்.
அதன் பின், மைத்திரிபால சிறிசேனவுடன் சேர்த்து 3 ஜனாதிபதிகள் ஆட்சி செய்துள்ளனர். 4வது ஜனாதிபதியாக அநுரகுமார பதவியேற்றுள்ளார். அநுரகுமாரவின் காலத்தில், தையிட்டி திஸ்ச விகாரை விடயம் கூர்மையடைந்தமைக்கான காரணம் பாதிக்கப்பட்ட தையிட்டி மக்களுக்கு நிவாரணம் கிடைக்க வேண்டும் என்பதல்ல.
மாறாக, தமிழ் தேசியக் கட்சிகளினதும், மாறி மாறி ஆட்சிக்கு வரும் அரசின் பங்காளி கட்சிகளினதும் வாக்குகளை, தேசிய மக்கள் சக்தி பெற்றுவிட்டது என்பதேயாகும்.
உளளுராட்சி மன்ற தேர்தலில் தன்னும் திசைகாட்டி வாக்குகளை பெறாது, தடுக்கும் நோக்கமே தையிட்டி விவகாரத்தை அவர்கள் கையில் எடுத்துள்ளார்கள்.
ஆஞநர் இதுவரை (தையிட்டி தவிர்ந்த) நேர்மையாக இருந்துள்ளார் என்பதற்கு நாம் எப்போதாவது பாராட்டியுள்ளோமா? அவர் வேலையைவிட்டு சென்ற போது அதற்காக குரல்கொடுத்தோமா?
அரசியல்வாதிகள் எல்லாம் ஏறத்தாழ ஓரே மாதிரியானவர்கள். ஒரு தேர்தலில் வென்றவுடன், அடுத்த தேர்தலில் வெல்வதற்கான ஏது நிலைகளைக் நோக்கியதாகவே அவர்களின் செயற்பாடுகள் இருக்கும்.
அதனையே பிரதமரும் யாழ் மாவட்ட அரச நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொடர்கின்றனர். அதன் வெளிப்பாடு தான் அவர்கள் படம் காட்டுகின்றார்கள்.
வட மாகாணத்தில் பல பாடசாலைகளுக்கு அடிப்படை வசதிகளில் ஒன்றான மலசலகூட வசதிகள் கூட சரியான முறையில் இல்லையென்பது மறுக்க முடியாது.
கடந்த பல ஆண்டுகளாக இந்த நிலை தொடர்கின்றது. அவை நிவர்த்தி செய்யப்படவேண்டும். 2025 நிதி ஒதுக்கீட்டை சரியாக கல்விப்புலம் சார்ந்தவர்கள் பயன்படுத்த வேண்டும். கடந்த பல ஆண்டுகளாக இருந்துவரும் இந்த பிரச்சினை இப்போது தான் வைத்தியர் முரளியின் கண்களுக்கு தெரிந்திருப்பது வேடிக்கை.
கல்வி முறையே மாற்றப்படவேண்டும் என்பது தான் யாதார்த்தம். அதில் ஆய்வுக்கூடங்கள் மற்றும் தொழில்நுட்ப பிரிவுகள் என்ன விதிவிலக்கா? பிரதமர் யாழ் இந்துக் கல்லூரியை தவிர்த்து வேறு பாடசாலைகளுக்கு சென்றிருக்கலாம் என்ற வைத்தியரின் ஆதங்கம் ஏற்றுக்கொள்ளக்கூடியதே.
வடக்கிலே குறிப்பாக யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் மருத்துவ மாபியாக்கள் செயற்படுகின்றனர். குறிப்பாக யாழ் போதனா வைத்தியசாலையில் மருத்துவ மாபியாக்களின் செயற்பாட்டினால் நோயாளர்கள் இறக்கின்றனர் என்ற வைத்தியர் முரளியின் கருத்தை, அரசசார்பில் இயந்திரம் கவனத்தில் எடுத்தே ஆக வேண்டும்.
வைத்தியர் அர்ச்சுனாவின் பின், மருத்துவ மாபியாக்கள் தொடர்பிலே முரளி வல்லிபுர நாதன் ஒப்புதல் வாக்கு மூலம் அளித்திருப்பது பாராட்டிற்குரியது. எனவே அரச இயந்திரம் இதனை கருத்தில் கொள்ள வேண்டும்.
வட்டுவாகல் பாலத்திற்கு நிதி ஒதுக்காவிட்டாலும் தவறு என்போம்; நிதி ஒதுக்கினால் குடியேற்றத்திட்டத்திற்கானது என சொல்வது நமது சமூக கட்டமைப்பின் வழமையாகும்.
யாழ் மாநகரசபையின் கீழ் வரும் பொது நூலகத்தினை, யாழ் மாநகரசபை மக்கள் ஆட்சியில் இருந்த போது எதனையும் செய்யாது விடுத்து, இப்போது நிதி ஒதுக்கிய பின் சப்பைகட்டு கட்டுவதனை எவ்வாறு சொல்வது?
நெடுஞ்சாலைகளுக்கு நிதி ஒதுக்கி அபிவிருத்தி செய்தாலும், அபிவிருத்தி செய்யாவிட்டாலும், திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் என்பது நடந்தே தீரும். அநுர அரசு மட்டுமல்ல, எந்த அரசு வந்தாலும், ஏன் ஒரு சிறுபான்மையினத்தவர் பிரதம மந்திரியாக வந்தாலும், திட்டமிட்ட சிங்கள குடியேற்றமும் நில அபகரிப்பும் நிறுத்த முடியாத ஒன்றாகும்.
சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோரை குற்றவாளிகளா, நிரபராதிகாரிகளா என்பதனை முடிவு செய்வது நீதித்துறையே ஆகும், மருத்துவத்துறையல்ல. அவர்களுக்கு வாக்களித்த கிழக்கு மக்களை ஏளனமாக விழிக்கும் வைத்தியர் முரளி தான் திசைக்காட்டிக்கே வாக்களித்ததாக சொல்கிறார்.
வடக்கிலே முன்னாள் ஆயுதக்குழுக்கள், அதாவது துணை இராணுவ குழுக்களுக்கு வாக்களித்த வடக்கு மக்களை நீங்கள் கண்டு கொள்ளாததன் மாமம் என்ன?
அதிகாரசபைகளின் நோக்கம் ஆளும் அரசாங்கத்தின் அரசியல் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து செல்வது தான்.
அதில் மாற்றுக்கருத்துக்களுக்கு இடமில்லை. அதிலே குறிப்பாக மகாவலி அபிவிருத்தி அதிகார சபை என்பது நன்கு திட்டமிட்டு இலங்கையை பௌத்த சிங்கள நாடாக மாற்றும் பேரினவாத அரசின் இலக்கினை அடைவதே ஆகும்.
அதனை யார் ஆட்சியமைத்தாலும், வலதுசாரிகளோ இடதுசாரிகளோ அதனை நோக்கியே நகர்வார்கள். கோவணத்தை பறிகொடுத்த சுடலையாண்டிகளாக தமிழர்கள் மாறப்போகின்றார்கள் என்ற முரளி வல்லிபுர நாதனின் பயமானது, வடக்கு, கிழக்கு மாகாண சபைகளையும் உள்ளுராட்சி சபைகளையும் ஆளும் தரப்பிடம் தமிழ் மக்கள் தாரைவார்த்து கொடுத்துவிடுவார்கள் என்ற பயம் இருப்பதனை தெளிவாக காட்டுகின்றது.
கடந்த முறை, வடக்கு மாகாணசபையை தமிழ் மக்கள் தெளிவாக தமிழ் தேசிய தரப்பிடமே கொடுத்தார்கள். ஆனால் வடக்கு மாகாணசபையானது அதன் உறுப்பினர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதங்களை பெற்றதும், அஸ்மினை கனடாவுக்கு அனுப்பினதும், எக்கச்சக்கமான தீர்மானங்களை நிறைவேற்றியதும், உட்கட்சி மோதல்கள் உருவாகி நம்பிக்கையில்லா தீர்மானங்களை கொண்டு வந்ததும், புதிய கட்சிகளும் புதிய கூட்டணிகளும் உருவானதை தவிர வேறு ஏதேனும் நடந்துள்ளதா என முரளி வல்லிபுர நாதன் பதிலளிப்பாரா?
தாமரைச்செல்வன்


