புதுக்கடை நீதிமன்றத்தில் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ‘கணேமுல்ல சஞ்சீவ’ சுட்டுக் கொலை செய்வதற்கு துப்பாக்கிதாரிக்கு உதவிய பெண் தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு 10 இலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
பொலிஸ் தலைமையகத்தில் இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
‘கணேமுல்ல சஞ்சீவ’ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரையில் 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எனினும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பெண்ணை கைது செய்வதற்கு பொது மக்களின் உதவியைக் கோருகின்றோம். குறித்த பெண் தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு 10 இலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும்.
இதேவேளை, கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தனர். அவர்களுக்கு துப்பாக்கியை வழங்கிய சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இம்மாதம் 10ஆம் திகதி கொட்டாஞ்சேனை பெனடிக் மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டின் போதும், இந்த சந்தேகநபராலேயே ரி – 56 ரக துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டார்.
மேலும் மித்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற முக்கொலையுடன் தொடர்புடைய 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டிலிருந்து இந்த கொலைகள் திட்டமிடப்பட்டு வழி நடத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இதனுடன் தொடர்புடைய முன்னாள் இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

