உள்ளூர் முக்கிய செய்திகள்

இறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்களை கொன்று வட்டுவாகல் விகாரையின் கீழ் புதைத்துள்ளனர்- ரவிகரன் எம்பி

கடந்த 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் படுகொலைசெய்யப்பட்டு, தற்போது முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையின்கீழ் பகுதியில் புதைக்கப்பட்டிருப்பதாக மக்கள் பலரும் தம்மிடம் முறையிட்டுள்ளதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட நீதிமற்றும் தேசிய ஒற்றுமைப்பாடு அமைச்சிற்கான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எனவே மடியில் கனமில்லையெனில் விகாரையை அகற்றி அகழ்வினை மேற்கொண்டோ, நவீனமுறையில் ஸ்கேன் கருவிகள் மூலமோ ஆய்வுகளை மேற்கொண்டு உண்மையைக் கண்டறிய அரசாங்கம் முன்வரவேண்டுமென இதன்போது நீதி அமைச்சையும் கோரியுள்ளார்.

இதன்போது பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கி நீதியை வழங்குமாறும், அரசியல்கைதிகள் விவகாரம், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்,கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழிவிவகாரம், அரச திணைகளங்கள் மற்றும், அரசபடைகளால் தமிழ் மக்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்படும் விவகாரங்கள் என்பவற்றிற்கும் நீதியை வழங்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் நீதி அமைச்சைக் கோரியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

தேசிய மக்கள் சக்தி அரசு இதுவரை இனவாதம் பேசவில்லை. வரவேற்கின்றோம். தமிழர்கள் இந்த நாட்டில் ஒரு பலமான சக்தி. இதனை முழுமனதோடு ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தமிழர்கள் நாம் நீதி கேட்கின்றோம். பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படுதல் வேண்டும். ஜனாதிபதியும் தனது நேற்றைய உரையில் குறிப்பிட்டிருந்தார். நடந்தால் வரவேற்கின்றோம்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதி கிடைக்கவேண்டும். நான் சொல்வதெல்லாம் உண்மை, உண்மையைத் தவிரவேறொன்றுமில்லை.

யுத்தம் மௌனிக்கப்பட்டபோது தமது உறவுகளை, குறிப்பாக கணவரை மனைவியும், மகன், மகளை பெற்றோரும் வட்டுவாகல் சப்தகன்னிமார் ஆலய முன்றலில் ஒப்படைத்தார்கள். தடுப்புமுகாம்கள், கடல்எனப் பல இடங்களிலும் சரணடைந்தார்கள்.

வட்டுவாகலில் ஒப்படைக்கப்பட்டவர்களை கொக்குத்தொடுவாய் நோக்கியும், கேப்பாப்புலவு நோக்கியும், வட்டுவாகல் கடற்கரை நோக்கிய பாதையிலும் பஸ்களில் கொண்டுசெல்லப்பட்டார்கள்.

இலங்கைப் படையினரிடம்தான் ஒப்படைத்தோம். இன்னும் காணவில்லையே அவர்கள் எங்கே என்று தேடுகின்றார்கள். நீதிஅமைச்சரே நீதி தாருங்கள். நியாயப்படி நடந்து கொள்ளுங்கள்.

வட்டுவாகல் கடற்கரைப் பாதை நோக்கி பேருந்தில் ஏற்றிக்கொண்டு சென்றவர்களை விட்டு விட்டு பேருந்துகள் மட்டும் திரும்பி வந்ததாகவும் மக்கள் சொல்கின்றார்கள்.

வட்டுவாகல் தனித்தமிழ் சைவக்கிராமமாகும். பௌத்தர்கள் இல்லாத இடத்தில் ஒரு பெரியவிகாரை அமைக்கப்பட்டுள்ளது.

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது சரணடைந்தவர்களை கொண்டுசென்று, படுகொலைசெய்து புதைத்துவிட்டு அதன்மேல் இவ்வாறு பெரியவிகாரை இங்கு அமைத்துவிட்டதாத மக்கள் கூறுகின்றனர். உங்களின் மடியில் கனமில்லை என்றால் இதனை நிரூபியுங்கள்.

விகாரையை அகற்றி ஆழமாகத் தோண்டுங்கள். அல்லது புதிய தொழில்நுட்ப முறையில் ஆழத்தில் இருப்பவற்றை அறியக்கூடியதான நவீன கருவிகளைப் பயன்படுத்தி உண்மையை வெளிப்படுத்துங்கள்.

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழிக்கும் நீதியைத்தாருங்கள். சிலவேளை நீங்கள் நீதயைத்தரும்போது, நீதிபதி சரவணராஜா போல்தான் உங்களுக்கும் நீதி கிடைக்குமோதெரியாது. ஆனால் இன்றைய அரசை நம்புவோம் .

அதேபோல் முல்லைத்தீவில் மக்களின் காணிகள் அரச திணைக்களங்களால் அபரிக்கப்பட்டுள்ளன. 2009ஆம் ஆண்டிற்குமுன்பு 2,22006ஏக்கர்தான் அடர்ந்த காடுகள் உட்பட வனஇலாகாவின்கீழ் இருந்தது. 2009ஆம் ஆண்டின் பிற்பாடு 4,32121ஏக்கர் காணிகள் வனஇலாகாவிடம் உள்ளது.

மக்களுடைய பயன்பாட்டில் இருந்த சிறுதானியப் பயிர்ச்செய்கை, தோட்டப்பயிர்ச்செய்கை, நெற்பயிர்ச்செய்கைசெய்த மக்களின் காணிகளை, கிராமஅலுவலர், காணி உரிமையாளர்கள், பிரதேசச்செயலாளர், மாவட்டச்செயலாளர் யாரிடமும் கேட்காமல் எல்லைக்கற்களையிட்டு தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளார்கள்.

இந்நிலையில் தங்களுடைய வாழ்வாதாரத்துக்குரிய பயன்பாட்டில் இருந்த காணிகள் இல்லாது மக்கள்படும் துன்பங்கள் ஏராளம். நான் குறிப்பிடும் விடயங்கள் முல்லைத்தீவில்மட்டுமல்ல மன்னார், வவுனியாவிலும் உள்ளது.

படையினரும் எமது மக்களின் வாழ்வாதார மற்றும் குடியிருப்புக் காணிகளை அபகரித்து வைத்துள்ளனர். முல்லைத்தீவில் 100க்கு மேற்பட்ட படையினர் முகாம்கள் காணப்படுகின்றன. அங்கிருக்கும் மக்கள் தொகையின் அரைவாசிக்கு படையினர் அதாவது இரண்டு மக்களுக்கு ஒரு படையினர் காணப்படுகின்றனர். கிட்டத்தட்ட 35000ஏக்கர் காணிகள் படையினரிடம் காணப்படுகின்றன.

இதில் பெரும்பகுதி காணிகள் மக்களுடைய வாழ்வாதாரத்துக்குரியதும், குடியிருப்புக்காணிகளுமாகும். இப்படி இருக்க நாங்கள் எப்படி பாதுகாப்பு அமைச்சின் வாக்குளிப்பில் ஆதரிப்பது. எனவே கௌரவ நீதிஅமைச்சர் அவர்களே இந்த விடயங்களுக்கு நீதிதாருங்கள் என்று கேட்கின்றோம் என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்