பிரதமர் உட்பட முக்கிய இந்திய தொழிலதிபர்களை சந்தித்தார் ரணில்
டெல்லிக்கு விஜயம் செய்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (01-03-2025) இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
பலதரப்பட்ட பிரச்சினைகளை தொடர்பில் ரணில் விக்கிரமசிங்கவின் கண்ணோட்டத்தை பாராட்டியதாக பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
‘உலகளாவிய விசேட முன்னேற்றங்கள்’ குறித்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வியாழக்கிழமை இந்தியா சென்றார்.
உலகலாவிய முக்கிய இராஜதந்திரிகளின் பங்கேற்புடன் கடந்த இருநாட்களாக இடம்பெற்ற மாநாட்டில் கலந்துகொண்டார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரதம விருந்தினராக பங்கேற்றதுடன், இந்த கலந்துரையாடலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கனடாவின் முன்னாள் பிரதமர் ஸ்டீவன் ஹாபர், அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் டோனி எபொட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதன் போது தெற்காசிய புவிசார் அரசியல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறப்புரையாற்றினார்.
இதன் போதே இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்து கலந்துரையாடினார். ‘எனது நண்பர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
அவருடனான உரையாடல்களை நான் எப்போதும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்.
பல்வேறு பிரச்சினைகள் குறித்த ரணில் விக்கிரமசிங்கவின் கண்ணோட்டத்தைப் பாராட்டியிருக்கிறேன் என சந்திப்பு குறித்து பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்தியாவின் முக்கிய தொழிலதிபர்களுடனான சந்திப்பிலும் பங்கேற்ற ரணில் விக்கிரமசிங்க, இன்று ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

