உள்ளூர் முக்கிய செய்திகள்

தமிழர் விவகாரம் தொடர்பில் ஐநாவின் பொறிமுறைகளை அநுர அரசாங்கம் நிராகரித்துள்ளது – எம்.ஏ.சுமந்திரன்

ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறையை நிராகரிப்பதாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அறிவித்திருப்பதானது, கடந்தகால மீறல்கள் பற்றிய உண்மைகளை அறியவேண்டிய அவசியம் தமக்கு இல்லை அல்லது அவை மூடிமறைக்கப்படவேண்டும் என்ற தோரணையிலேயே அவர்கள் செயற்படுவதையே காண்பிப்பதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் விசனம் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து தெளிவுபடுத்தும் நோக்கில் நேற்று (04-03-2025) கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியதாவது:

ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடரில் கடந்த வாரம் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் உரையாற்றியதுடன், இவ்வாரம் இலங்கையின் வதிவிடப்பிரதிநிதி அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறார்.

அவை இலங்கையில் மனித உரிமைககள், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிசெய்வதை இலக்காகக்கொண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்குத் தடையேற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றன.

2015 ஆம் ஆண்டு மங்கள சமரவீர வெளிவிவகார அமைச்சராகப் பதவிவகித்த காலப்பகுதியில் மாத்திரம் தான் விதிவிலக்காக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் இணையனுசரணையுடன் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது.

இம்முறை பேரவையில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் ஆகிய மூன்று கட்டமைப்புக்களையும் பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையொன்றை ஸ்தாபிப்பதன் ஊடாக நாட்டில் நிலவும் நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

ஆனால் 2015 செப்டெம்பரில் அப்போதைய வெளிவிவகார அமைச்சரால் மீள்நிகழாமைக்கான உத்தரவாதமாகவும், தமிழர் இனப்பிரச்சினைக்கான தீர்வாகவும் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் எனக் கூறப்பட்டது.

இருப்பினும் தற்போது அமைச்சர் விஜித்த ஹேரத்தினால் குறித்துரைக்கப்பட்ட மூன்று கட்டமைப்புக்களுக்கும் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டத்தில் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் தான் அவர்கள் கூறுவதை உண்மையிலேயே நடைமுறைப்படுத்தப்போகிறார்களா என்பது தெரியவரும்.

அதேபோன்று முன்னர் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதாக வாக்குறுதியளித்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், இப்போது அதனைப் பதிலீடு செய்வதற்குப் பிறிதொரு சட்டத்தைக் கொண்டுவரப்போவதாகக் கூறுகிறது.

மேலும் இலங்கையில் கடந்தகாலங்களில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறையை தாம் முற்றாக நிராகரிப்பதாக கடந்த திங்கட்கிழமை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றிய இலங்கையின் வதிவிடப்பிரதிநிதி குறிப்பிட்டிருக்கிறார்.

எனவே கடந்தகால மீறல்கள் பற்றிய உண்மைகளை அறியவேண்டிய அவசியம் தமக்கு இல்லை அல்லது அவை மூடிமறைக்கப்படவேண்டும் என்ற தோரணையிலேயே தற்போதைய அரசாங்கம் செயற்படுகிறது.

நல்லிணக்கம் என்பது உண்மையின் அடிப்படையிலேயே ஏற்படுத்தப்படவேண்டும்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமக்கு ஆணை அளிக்கப்பட்டிருப்பதாகக் கூறும் தற்போதைய அரசாங்கம் அம்மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின் பிரதான கோரிக்கையை இவ்வாறு நிராகரிப்பது ஏற்புடையதன்று என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்