இலங்கையுடனான வெளிநாட்டுக் கடன்மறுசீரமைப்பை மேற்கொண்டதன் காரணமாக சீனாவின் பிரதான ஏற்றுமதி, இறக்குமதி பங்குதாரரான சீன எக்ஸிம் வங்கிக்கு 7பில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டம் ஏற்பட்டுள்ளது என்று சீனத்தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்தார்.
அத்துடன், தெற்காசியாவில் இலங்கை, இந்தியா, சீனா ஆகியன ஒன்றிணைந்து ‘கூட்டுச் செயற்றிட்டமொன்றை’ முன்னெடுக்க வேண்டும் என்பது எனது கனவாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள சீனத்தூதரகத்தில் சீனத்தூதுவர் கீ சென்ஹொங்கிற்கும் ஊடகப்பிரதிநிதிகளுக்கும் இடையில், சீன அரசாங்கத்தின் செயற்பாட்டு அறிக்கை மற்றும் வெளிவிவகார கொள்கை மற்றும் உறவகள் பற்றிய உரையாடல் நடைபெற்றது.
இதன்போது கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஆசியாக் கண்டத்தில் இந்தியாவும், சீனாவும் மிகப்பெரிய நாடுகள்.
இரு நாடுகளும் நட்பு நாடுகள். ஒரேயெல்லையைக் கொண்ட நாடுகளாகவும் உள்ளன.
பாரம்பரிய நாகரீகத்தினையும் கொண்ட நாடுகளாகவும் உள்ளன.
இரு நாடுகளிலும் பாரிய சந்தை வசதி காணப்படுவதோடு இரு நாடுகளுக்கும் பொருளாதார அபிவிருத்தி என்ற ஒரே இலக்கும் காணப்படுகின்றது.
அந்த வகையில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் முன்னேற்றமடைந்து மேம்பட்டவையாக இருக்க வேண்டியது அவசியமாகும்.
பிரதமர் மோடி தலைமையிலான இந்தியாவும், ஜனாதிபதி ஷி தலைமையிலான சீனாவும் முரண்பாடுகளை களைந்து நல்லிணக்கத்துடன் பயணிக்க வேண்டியது அவசியமாகிறது.
ஆசியப்பிராந்தியத்தில் இலங்கையும், இந்தியாவும், சீனாவும் ஒன்றிணைந்து எதிர்காலத்தில் ‘கூட்டு செயற்றிடடத்தில்’ பங்கேற்க வேண்டும் என்பது எனது மிகப்பெரும் கனவாக உள்ளது.
ஜனாதிபதி அநுரகுமாரவின் சீன விஜயம் தொடர்பில்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்த ஆண்டின் முற்பகுதியில் சீனாவுக்கு விஜயம் செய்தார்.
அவரது விஜயமானது இருநாடுகளுக்கும் இடையிலான வரவிலக்கணமாக அமைந்துள்ளது.
அவரது விஜயத்தின்போது 15 உடன்படிக்கைகள் கைச்சத்தாகியுள்ளதோடு, அவை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கும் இரு நாட்டுத் தலைவர்களும் இணங்கியுள்ளனர்.
இதன்மூலமாக இருநாட்டு பிரஜைகளும் அதிகளவான நன்மைகளை அடையவுள்ளனர்.
2026ஆம் ஆண்டு பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளை சீனா வழங்கியுள்ளதோடு கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இம்முறை அதிகளவான தொகை வழங்கப்படுகின்றது.
இதில் பௌத்த கற்கை நிலையங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இவற்றை வழங்குவதற்கான விசேட தூதுக்குழுவினரும் வருகை தரவுள்ளனர்.
மேலும், துறைமுகநகரத்தில் சீனாவின் மாநாட்டு மண்டபமொன்று நிர்மாணிக்கப்பட்டு இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ளது.
இச்செயற்பாடு முன்னெடுக்கப்படுவதை பார்வையிடுவதற்காக விசேட தூதுக்குழுவொன்றும் வருகை தரவுள்ளது.
சினோபெக் நிறுவனமானது, இலங்கைக்கு பாரியளவிலான வெளிநாட்டு முதலீட்டை கொண்டுவரவுள்ளதோடு கைத்தொழில்துறையை மேம்படுத்தி அதனூடாக வருமானத்தை ஈட்டுவதற்கும் பெரும்பங்களிக்கவுள்ளது.
நான்கு வருடங்களாக நான் இலங்கையில் கடமையாற்றுகின்றேன்.
எமது மக்களுடன் மக்களுக்கான மூலோபாயத்தின் அடிப்படையிலான உதவிகள் எந்தவிதமான மறைமுகமான நிகழ்ச்சி நிரலையும் கொண்டதல்ல.
பொருளாதார பின்னடைவின் போதான கடன்மறுசீரமைப்பால் சீனாவுக்கு நட்டம்
இலங்கையுடன் சீனாவே முதன்முதலாக கடன்மறுசீரமைப்பு ஒப்பந்தத்தினை கைச்சாத்திட்டது.
அந்த வகையில் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்புக்கு முதலில் இணங்கிய நாடாகவும் சீனா இருக்கின்றது.
ஆனால் இந்தியா உள்ளிட்ட ஏனைய நாடுகள் இன்னமும் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்புக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லை.
அதேநேரம், இலங்கையுடனான கடன்மறுசீரமைப்பை சீனா மேற்கொண்டதன் மூலமாக பெருந்தொகையான நிதியை இழந்துள்ளது.
குறிப்பாக இலங்கையுடனான சீனாவின் கடன்மறுசீரமைப்பு இணக்கத்தினால் 7பில்லியன் அமெரிக்க டொலர்களை சீனாவின் எக்ஸிம் வங்கி இழந்துள்ளது.
இந்த இழப்பு தொடர்பில் யாரும் பேசுவதில்லை.
சீன எக்ஸிம் வங்கி சீனாவின் முக்கியமான ஏற்றுமதி, இறக்குமதி விடயங்களில் பங்காளராக இருக்கின்றது.
ஆகவே இத்தகைய பெரும் இழப்பானது எவ்வாறிருக்கும் என்பதை சிந்தித்து பார்க்க முடியும்.
இலங்கையின் கடன்மறுசீரமைப்புக்காக சீனா பெருந்தியாகத்தைச் செய்துள்ளதோடு அதிகளவான பங்களிப்பையும் வழங்கியுள்ளது.
ஆனால் அந்த விடயங்களை சீனா பிரசாரம் செய்வதில்லை.
அமெரிக்க மற்றும் ரஷ்ய உறவு
உலக ஒழுங்கு மாறிவருகின்றது.
பல்வேறு சவால்களை கடந்து பயணிக்க வேண்டியுள்ளது.
இது ட்ரம் தலைமையிலான அமெரிக்காவுக்கு மட்டுமல்ல அனைத்து தரப்புக்களுக்குமே பொருந்தக்கூடியது தான்.
அந்த வகையில் சீனா கடந்த காலங்களைப்போன்று மோசமான கூறுகளின் தாக்கங்களை கடந்து பயணிப்பதற்கு உறுதி பூண்டுள்ளது.
இங்கே அமெரிக்கா, ரஷ்யா உறவுபற்றி கேட்கப்பட்டது.
சீனாவும், ரஷ்யாவும் அணிசேராக் கொள்கையை பின்பற்றுகின்றன.
மூன்றந்தரப்பு மோதல்களை தவிர்ப்தொடு முரண்பாடுகளற்ற தேசங்களாக பயணிப்பதற்கான இணக்கத்தைக் கொண்டிருக்கின்றன.
இந்த வரலாற்று ரீதியான பிணைப்பானது என்றும் மாற்றமடையப்போவதில்லை.
அதேநேரம், அமெரிக்காவுடனான இருதரப்பு உறவுகளை சுமூகமாக முன்னெடுப்பதற்கு அதிகளவில் ஆர்வத்தை சீனா கொண்டிருக்கின்றது.
எனினும் சீனாவுக்கு எதிராக பயங்கரவாதப்போர், வர்த்தகப்போர், தொழில்நுட்ப பரிநாம வளர்ச்சினை மட்டுப்படுத்தும் நிலைமைகள் தொடருகின்றன.
எத்தைகயை போர்க்களை அமெரிக்கா தொடுத்தாலும் அந்தப்போர்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு சீனா எந்த எல்லைக்கும் செல்வதற்கு தயாராகவே உள்ளது.
புதிய சீனா வடிவமைக்கப்பட்டு 76ஆண்டுகளாகின்றன.
அந்த வகையில் எந்தவொரு அச்சுறுத்தல்களுக்கும் புதிய சீனா முகங்கொடுப்பதற்கு தயாராகவே உள்ளது.
பல சவால்களை வெற்றிகொண்டு முன்னேற்றி வருகின்றது.
தனக்கான பொருளாதாரத்தினை தனாவே உருவாக்கியுள்ளது என்றார்.
வினாக்களுக்கு பதிலளித்த தூதரகத்தின் உதவி தூதுவர்
சீனத் தூதரகத்தின் பிரதிப் பிரதானி சூ யன்வெய், வடக்கில் இந்தியாவைத் தவிர வேறெந்த தரப்பினரும் கால்பதிக்க முடியாது என்று செல்வம் அடைக்கலநாதன் எம்.பி தெரிவித்த கருத்து தொடர்பிலான வினாவுக்கு பதிலளித்தார்.
அவர், இலங்கை, இந்திய கடல் மற்றும் நிலங்களில் சீனாவிற்கு எவ்விதமான மூலோபாய கவனமும் கிடையாது.
சீனா இலங்கையர்கள் என்ற அடிப்படையில் தான் அனைத்து மக்களுக்கும் உதவிகளை வழங்கி வருகின்றது.
இலங்கையின் கடற்பரப்பு இலங்கைக்கு சொந்தமானது.
இந்தியாவுடன் இலங்கையை மையப்படுத்திய முரண்பட வேண்டிய அவசியம் சீனாவுக்கு இல்லை.
சீனாவும் இந்தியாவும் நட்பு நாடுகள். அத்துடன் இலங்கையுடான உறவுகளை மேம்படுத்துவதிலோ, உதவிகளை வழங்குவதிலோ சீனாவுக்கு எவ்விதமான மறைமுக நிகழ்ச்சி நிரலும் கிடையாது.
இலங்கை மீண்டும் காலனித்துவ யுகத்துக்குள் செல்லப்போவதில்லை என்றார்.
இதேவேளை, அம்பாந்தோடையில் சினோபெக் நிறுவனத்தின் முதலீடு தொடர்பிலும் நிறுத்தப்பட்டுள்ள திட்டகளை முன்னெடுப்பது குறித்தும் அவர் தெளிவுபடுத்தல்களைச் செய்தார்.
அந்தவகையில் அரசியல் ஸ்திரத் தன்மை மற்றும் இலங்கையுடனான நெருக்கமான உறவுகளின் அடிப்படையில் தான் சீனா அம்பாந்தோட்டையில் தெற்காசியாவில் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை திறக்கின்றது.
இந்த முதலீட்டை சீனாவின் சினோபெக் நிறுவனம் மேற்கொள்கின்றது.
இதற்காக 3.7பில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்படவுள்ளது.
இதன்மூலமாக 15ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.
தற்போதைய நிலையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்காக ஆரம்பத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட நிலத்தின் அளவிற்கு மேலதிகமாகவும் நிலம் பெறப்படவுள்ளது.
அங்கு எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தை ஆரம்பிப்பதால் நீர்நிலைகள் பாதிக்கும் என்று கரிசனை வெளியிடப்பட்டுள்ளது.
ஆகவே சீனா, நீர்நிலைகளை பாதுகாப்பதில் கவனம் கொண்டுள்ளதோடு நீர் விநியோகத்திற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளது.
இதனால் எதிர்காலத்தில் நீரின் தன்மை மாறிவிடும், அல்லது குறைந்து விடும் என்று அஞ்சத்தேவையில்லை.
அதேநேரம், சீனாவின் சில திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் கடன் மறுசீரமைப்புக்கான அனைத்துச் செயற்பாடுகளும் நிறைவுக்கு வந்ததன் பின்னர் அந்தத் திட்டங்கள் மீள்பரிசீலனையின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்
