இந்தியா

மும்பை இண்டியன்ஸ் இரண்டாவது தடவையாக மீண்டும் சம்பியனானது

டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக மும்பை ப்றேபோர்ன் விளையாட்டரங்கில் நேற்று (15-03) இரவு நடைபெற்ற பரபரப்பான இறுதிப் போட்டியில் 149 ஓட்டங்களைத் தக்கவைத்து 8 ஓட்டங்களால் வெற்றியிட்டிய மும்பை இண்டியன்ஸ் இரண்டாவது தடவையாக சம்பியன் மகுடத்தை சூடியது.

2023இல் ஆரம்பமான மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட் முதலாவது அத்தியாயத்திலிருந்து தொடர்ச்சியாக இறுதிப் போட்டியில் பங்குபற்றிவரும் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணி, மீண்டும் 2ஆம் இடத்ததுடன் திருப்தி அடைந்தது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் 20 ஓவரக்ளில் 7 விக்கெட்களை இழந்து 149 ஓட்டங்களைப் பெற்றது.

எவ்வாறாயினும், அவ்வணியின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.

மொத்த எண்ணிக்கை 14 ஓட்டங்களாக இருந்தபோது மும்பை இண்டியன்ஸ் அதன் இரண்டாவது விக்கெட்டை இழந்தது.

எனினும், நெட் சிவர் ப்றன்ட், அணித் தலைவி ஹாமன்ப்ரீத் கோர் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 89 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை மீட்டெடுத்தனர்.

30 ஓட்டங்களைப் பெற்ற நெட் சிவர் ப்றன்ட், 3ஆவது ஓட்டத்தைப் பெற்றபோது மகளிர் ப்றீமியர் லீக் கிரிக்கெட் வரலாற்றில் 1000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்த முதலாவது வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.

மறுபக்கத்தில் அணித் தலைவிக்கே உரிய பாணியில் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ஹாமன்ப்ரீத் கோர் 9 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 66 ஓட்டங்களைப் பெற்றார்.

மத்திய வரிசையில் குணாலன் கமலினி 10 ஓட்டங்களையும் அமன்ஜோத் கோர் ஆட்டம் இழக்காமல் 14 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் மாரிஸ்ஆன் கெப் 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜெஸ் ஜோனாசன் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஸ்ரீ சாரணி 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்ஹி கெப்பிட்டல்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 141 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

அணித் தலைவி மெக் லெனிங் (13), ஷபாலி வர்மா (4), ஜெஸ் ஜோனாசன் (13), அனாபெல் சதர்லண்ட் (2) ஆகிய நால்வரும் குறைந்த எண்ணிக்கைகளுக்கு ஆட்டம் இழந்தது டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணிக்கு நெருக்கடியைக் கொடுத்தது.

எனினும் ஜெமிமா ரொட்றிக்ஸ், மாரிஸ் ஆன் கெப் ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அணிக்கு உற்சாகம் ஊட்டினர்.

மொத்த எண்ணிக்கை 66 ஓட்டங்களாக இருந்தபோது ஜெமிமா ரொட்றிக்ஸ் 30 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து சாரா ப்றைஸ் 5 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார்.

மாரிஸ்ஆன் கெப், நிக்கி ப்ரசாத் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 40 ஓட்டங்களைப் பகிர்ந்து ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தினர்.

ஆனால், 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மார்ஸ்ஆன் கெப் (40), ஷிக்கா பாண்டி (0), மின்னு மணி (4) ஆகியோர் ஆட்டம் இழந்ததால் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணியினால் வெற்றி இலக்கை அடைய முடியாமல் போனது.

நிக்கி ப்ரசாத் 25 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் நெட் சிவர் ப்றன்ட் 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மகளிர் ரி 20 உலகக் கிண்ண நாயகி அமேலியா கேர் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

144 பயணிகளுடன் 2.35 மணி நேரமாக வானில் வட்டமடித்த விமானம்… பத்திரமாக தரையிறக்கம்

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் தொழில் நுட்பகோளாறு காரணமாக, சுமார் 2 மணி நேரம் 35 நிமிடமாக வானத்திலேயே வட்டமடித்து கொண்டு இருந்த
இந்தியா

குடிமக்கள் கொண்டாட்டம் டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே விற்பனை ஆரம்பம்

டாஸ்மாக் கடைகள் 12 மணிக்கு திறக்கப்படுவதே வழக்கமாக இருந்து வருகின்றது ஆனால், தீபாவளி தினமான இன்றைய தினம் விதி மீறப்பட்டு மது விற்பனை ஆகா… ஓகோ…. என