இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி போட்டியிடுகின்ற சகல உள்ளூராட்சி சபைகளிலும் ஆட்சியைக் கைப்பற்றும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நியமனங்கள் தொடர்பான கலந்துரையாடல், முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் நேற்று (16-03-2025) இடம்பெற்றது.
இதன்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராகப் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள எம்.ஏ.சுமந்திரனுக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளருமான துரைராசா ரவிகரன் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
இக்கலந்துரையாடலின் பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சுமந்திரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி போட்டியிடுகின்ற உள்ளூராட்சித் தேர்தல் நியமனம் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.
சில இடங்களில் வேட்பாளர் நியமனங்களில் இருந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு, பெரும்பாலும் வேட்பாளர் நியமனங்கள் தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. எனவே அடுத்த வாரம் வேட்புமனுக்களை தாக்கல் செய்வோம்.
அந்த வகையில் போட்டியிடுகின்ற அனைத்து உள்ளூராட்சி சபைகளையும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.

