நாட்டின் இலவச சுகாதார சேவையின் பௌதீக வளங்களை மேம்படுத்துவதற்குத் தேவையான உதவிகளைத் தொடர்ந்தும் வழங்குவதற்குத் தயாராக உள்ளதாக ஐக்கிய நாடுகளின் திட்ட சேவைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அதன் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் சார்ல்ஸ் கெலனன் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது நடைபெற்று வரும் சுகாதார மேம்பாட்டுத் திட்டங்கள், எதிர்காலத்தில் செயல்படுத்தப்படவுள்ள சுகாதார மேம்பாட்டுத் திட்டங்கள், தேவைக்கேற்ப அந்தத் திட்டங்களைத் துரிதப்படுத்துதல் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
ஐக்கிய நாடுகளின் திட்ட சேவைகளுக்கான அலுவலகத்தினால் நாட்டில் உள்ள 30 அரச வைத்தியசாலைகளில் செயல்படுத்தப்படும் டிஜிட்டல் மயமாக்கல் திட்டம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 1,000 ஆரம்ப சுகாதார நிலையங்கள் நிறுவப்படும் – சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் ஆரம்ப சுகாதார சேவைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எளிதில் அணுகக்கூடிய 1,000 ஆரம்ப சுகாதார நிலையங்கள் நிறுவப்படும் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.
அம்பாறை தாதியர் கல்லூரியில் தாதியர் பயிலுநர்களுக்கான பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு அந்த அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், நாட்டு மக்களின் நோய்களைக் குணப்படுத்தும் பணியில் தாதியர்களுக்கு பெரும் பொறுப்பு உள்ளதாகவும், அந்த பொறுப்பை உணர்ந்து அவர்கள் நாட்டுக்குச் சிறந்த சேவையை வழங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

