மோசமான செயற்பாடுகள் மூலம் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா குழப்பியுள்ளார் என யாழ். ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடற்தொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
இன்று யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில் நடாத்திய ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மோசமான செயற்பாடுகள் மூலம் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா குழப்பியுள்ளார்.
இனிவரும் காலங்களில் தலைவருக்குரிய அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்தப் போவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்
மேலும், வரவு – செலவுத் திட்ட கூட்டத் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், யாழ். மாவட்டத்துக்கு பாதீட்டில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடு தொடர்பில் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பதற்காகவே இன்றைய ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடப்படவிருந்த இக்கூட்டத்தில் சிவன் பூஜையில் கரடி புகுந்தது போல சம்பவங்களும் இடம்பெற்றன.
தொல்லை தாங்க முடியாமல் எம்.பி ஒருவர் வெளியேறிச் சென்றுள்ளார்.
மேலும் சில அதிகாரிகள் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். எவருடைய பேச்சுக்கும் கட்டுப்படாத நபரொருவரால் தான் இப்படி நடந்தது.
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மோசமாக நடந்துகொண்டார்.
தனக்குள்ள தனிப்பட்ட பிரச்சினை காரணமாக சம்பந்தமில்லாத விடயங்களைக் கூட அவர் குறிப்பிட்டுள்ளார்.
எத்தடை வரினும் யாழ். மாவட்டத்துக்குரிய அபிவிருத்தி திட்டங்கள் தொடரும்.
அவை உரிய வகையில் முன்னெடுக்கப்படும். ஒருங்கிணைப்புக் குழு தலைவருக்குள்ள அதிகாரம் இனி முழுமையாக பயன்படுத்தப்படும்.
இச்சம்பவம் தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வரும். நாம் இது பற்றி மக்களிடமே முறையிடுகின்றோம். அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்றார்.

