தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் பொதுக்குழு கூட்டம் வருகிற 28-ந்தேதி திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்சன் அரங்கத்தில் நடைபெற இருக்கிறது.
கட்சி தொடங்கி நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டம் என்பதால் கூட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து கட்சி தலைவர் விஜய் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
கூட்டத்துக்கு வரும் அனைவருக்கும் போதிய பாதுகாப்பு வசதி மற்றும் அடிப்படை வசதிகளை சிறப்பாக செய்து கொடுக்க விஜய் உத்தர விட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து பொதுக்குழு கூட்டத்துக்கான ஏற்பாடுகளை கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் விஜய் உத்தரவுபடி இரவு பகல் பாராமல் செய்து வருகிறார்.
பொதுக்குழு கூட்டத்தில் சுமார் 2,500 பேர் பங்கேற்க இருக்கின்றனர்.
மாவட்டத்திற்கு 15 பேர் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.
மாவட்ட செயலாளர், இணைச் செயலாளர், பொருளாளர், 2 துணைச் செயலாளர்கள் என 5 பேரும் 10 பொதுக்குழு உறுப்பினர்களும் பங்கேற்க இருக்கின்றனர்.
இதுதவிர ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் ஒரு பெண் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
கூட்டத்தில் பங்கேற்க வரும் அனைவருக்கும் நேற்று கியூ.ஆர். கோர்டுடன் கூடிய டிஜிட்டல் அடையாள அட்டையை அந்தந்த மாவட்ட செயலாளர்களிடம் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் வழங்கினார்.
இதற்கான பணிகள் நேற்று நள்ளிரவு வரை நடந்தது.
கூட்ட அரங்குக்குள் செல்போன் கொண்டு வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.
அடையாள அட்டை கொடுக்கப்பட்டவர்கள் அதில் உள்ள கியூ.ஆர். கோர்டை ஸ்கேன் செய்தால் மட்டுமே அரங்கிற்குள் செல்ல முடியும்.
கூட்ட அரங்கம் முற்றிலும் துபாய் பாதுகாப்பு குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கின்றனர்.
பெண்களுக்கு என தனி இடவசதி மற்றும் அடிப்படை வசதி அரங்கத்தில் செய்யப்படுகிறது. கூட்டத்திற்கு வருவதற்கும், செல்வதற்கும் தனித்தனி நுழைவு வாயில்கள் பயன்படுத்தப்பட இருக்கிறது. கட்சி தலைவர் விஜய் செல்வதற்கென தனி வழி அமைக்கப்பட்டு உள்ளது.
கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் தமிழக மக்கள் பிரச்சனை பற்றியும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கிறது.
பொதுக்குழு நடைபெறுவதை தொடர்ந்து கூட்டம் நடைபெறும் திருவான்மியூர் சுற்றுப்புற பகுதிகள் அனைத்தும் இப்போதே களை கட்ட தொடங்கி இருக்கிறது. சுவர் விளம் பரங்கள், பேனர்கள், ராட்சத வரவேற்பு பலூன்கள் என பல்வேறு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் என்பதால் கூட்டத்தில் விஜய்யின் அரசியல் அதிரடி பேச்சு பற்றி மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. கூட்டத்திற்கு இன்னும் 2 தினங்களே இருப்பதால் தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் மிகுந்த உற்சாகம் எழுந்து உள்ளது.

