புத்திஜீவிகள் சிலர் மக்களை தவறாக வழிநடத்துகின்றனர் என குற்றம் சாட்டிய ஈ.பி.டி.பியின் ஊடக செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம், மாற்றத்தினை ஏற்படுத்துகின்றோம், வளமான நாடு அழகான எதிர்காலம் என்ற கோஷத்துடன் ஆட்சிக்கு வந்தவர்கள் ஆட்சி அதிகாரத்தினை கைப்பற்றி 6 மாதங்கள் நிறைவடைந்திருக்கின்றன என தெரிவித்தார்.
ஆனால் இந் ஆறு மாதங்களில் சொன்னவை ஏதும் செய்யப்படவில்லை என்கின்ற ஆதங்கம் மக்கள் மத்தியில் வெளிப்பட ஆரம்பித்திருக்கின்றது என்றும் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த ஊடக செயலாளர் ஸ்ரீகாந் மேலும் கூறுகையில்,
‘முடிவுற்ற ஆறு மாத காலத்திலே ஜே.வி.பி. அரசாங்கத்தினால் ஒரேயொரு மாற்றத்தினையே உருவாக்கப்பட்டிருக்கின்றது.
அந்த மாற்றம் என்பது, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களை கேலிக்கூத்தாக மாற்றியிருப்பதுதான்.
உள்ளூராட்சி சபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட நேரத்திலே அரசியல் அறத்திற்கு முரணான வகையிலே அந்தக் கூட்டம் நடாத்தப்பட்டிருந்தது.
இருந்தாலும் குறித்த கூட்டங்களில் இடம்பெற்ற கேலிக் கூத்துக்களும், சபை நாகரீகமற்ற கருத்தாடல்களும், கூட்டத்தை கையாளும் திராணியற்ற தலைமைத்துவமும், அந்தக் கூட்டங்களிலே கலந்து கொண்டிருந்த அரசியல் தலைவர்கள் மத்தியிலும், அரச அதிகாரிகள் மத்தியிலும், மக்கள் மத்தியில்கூட, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சின் வேலைத்திட்டங்களையும் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தாவின் நேர்த்தியான தலைமைத்துவ பண்புகளையும் பேசு பொருளாக மாற்றியிருக்கிறது என ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் மேலும் தெரிவித்தார்.

