உள்ளூர்

அரசாங்கம் அதிகாரப்போக்கில் செயற்படுகிறதென வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஸ் குற்றஞ்சாட்டு

நீர்வேலியில் பிரதமர் கலந்துகொண்ட பிரச்சார மேடையில் தன் தொடர்பில் பெயர் குறிப்பிட்டு நீண்டதாக அமைச்சர் சந்திரசேகரன் தெரிவித்த குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

நீர்வேலி வாய்க்கால் தரை பிள்ளையார் கோவில் முற்றத்தில் கோவிலின் முகப்பினை மறைத்து மேடை அமைத்து தேசிய மக்கள் சக்தி பிரச்சாரக் கூட்டத்தினை நடத்தியது. அப்பிரச்சாரம் தேர்தல் சட்ட விதிமுறை மீறல் என்பதை நேரில் தேர்தல் முறைப்பாட்டு அலுவலர்கள் முன் சுட்டிக்காட்டினேன்.

அது பற்றிய முறைப்பாடுகளையும் மேற்கொண்டேன். சட்ட, சம்பிரதாய மற்றும் எமது சமய ஒழுக்க் விதிகளின் அடிப்படையில் ஆலய வளாகத்தில் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களை எந்த கட்சியும் மேற்கொள்ள முடியாது. வீதியால் செல்பவர்கள் கூட கோவிலை தரித்து செல்லவேண்டும்.

ஆகவே கோவிலை மறைத்து அரசியல் பிரச்சாரம் செய்வது என்பது என்மை அதிர்ப்திக்குள்ளாக்குகின்றது. இவைகளே நாம் எதிர்ப்பினை மேற்கொள்ளக் காரணம்.

தேர்தல் முறைப்பாடுகளையடுத்து தேர்தல் அதிகாரிகள் கூட்ட ஏற்பாட்டாளர்க்கு வழங்கிய அறிவுறுத்தல்களை அரசாங்கம் என்ற அதிகார மமதையிலேயே பிரதமர் தலைமையிலானவர்கள் மீறினர். அச் சட்ட மீறலுக்கு பொலிசாரும் இராணுவத்தினரும் பாதுகாப்பு வழங்கினர். அரசாங்கமாக தேசிய மக்கள் சக்தியை நாட்டிலுள்ள தேர்தல் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்கள் கட்டுப்படுத்த முடியாதுள்ளனர் என்பதுவே நடைமுறை நிதர்சனமாகவுள்ளது.

நான் இவ்விடத்தில் தலையிட்டமை தொடர்பில், பெயர் குறிப்பிட்டு அமைச்சர் சந்திரசேகரன் அவர்களால் மேடையில் பகிரங்கமாக விமர்சிக்கப்பட்டிருந்தேன். இங்குகூறப்பட்ட விமர்சனத்திற்கு பதிலளிக்குமுகமாக ஒரு சிலவற்றையாவது நான் குறிப்பிட்டாக வேண்டியுள்ளது.

மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் பௌத்த பேரினவாத ஆக்கிரமிப்புக்களையும் அரசியல் அராஜகங்களையும் மேற்கொண்ட போது எதிர்த்து சொல்லிலும் செயலிலும் இயங்கியுள்ளேம். அதற்காக இன்றும் எனக்கு எதிரான வழக்குகள் சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக நிலுவையில் உள்ளன. எமது மக்களை இராணுவ அதிகாரம், திணைக்கள அதிகாரம் கொண்டு அடக்க முற்பட்ட போதும் நாம் போராடியுள்ளோம். எவரினதும் அச்சுறுத்தல்களுக்கும் நாம் அஞ்சமுடியாது. ராஜபக்சாக்கள் எம் மக்கள் மீது தொடர்ச்சியாக ஒடுக்குமுறையை பிரயோகித்தனர்.

ஒருகட்டத்தின் பின்னர் அமைச்சர் சந்திரசேகரன் தலைமையிலான கட்சியும் அரசாங்கத்துக்கு வெளியே நின்று ராஜபக்ஷாக்களை எதித்தார்கள். தங்கள் கட்சியின் கொள்கைக்கும் எமது தமிழ்த் தேசிய கொள்கைக்கும் வேறுபாடு காணப்பட்ட போதும் அரச அடக்குமுறையை தாக்குப் பிடிப்பதற்காக கொழும்பில் செயற்பாட்டாளர்களாக நாம் தொடர்புகளை பேணவேண்டியிருந்தது.

போரின்போதும் பேரின் பின்பாகவும் இராணுவமயமாக்க சூழலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் உயிர் அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாது நாம் தமிழ்த் தேசிய நிலைப்பாடு உடையவர்களாகவும் நீங்கள் இடதுசாரி நிலைப்பாடு உடையவர்களாகவும் இணைந்து போராடினோம். இது தங்களுடன் மட்டுமல்ல. அரச அடக்குமுறைக்கு எதிரான உணர்வில் இருந்த பல சிங்கள முஸ்லிம் தலைவர்களுடனும் செயற்பாட்டாளர்களுடனும் ஊடாட்டத்தினை நான் பேணியுள்ளேன்.

இந்த ஊடாட்டம் ஆட்சி மாற்றம் மட்டுமல்ல. அரசொன்றின் இனவாதத்தினை வெளிப்படுத்துவதாகும். மனித உரிமைகள் ரீதியில் தொடர்பு படும் எந்தச் சந்தர்ப்பத்திலும் நீங்கள் ஆட்சிக்கு வருவீர்கள் என நான் கனவிலும் நினைக்கவில்லை. நீங்கள் அதிகாரத்துக்கு வந்த பின்னர் எனக்கு பேச அவசியம் ஏற்படவில்லை. ஆனால் ஆட்சிக்கு வந்த நீங்கள் எமது மக்கள் மீதான ஒடுக்கமுறைக்கு நீதியைப் பெற்றுக்கொடுத்தல் மற்றும் அரசியல் தீர்வு ரீதியில் பொறுப்புச் சொல்வதுடன் நிரந்தர தீர்வினையும் முன்வைக்க பொறுப்புடையவர்கள் என்பதை அவதானிக்கின்றோம்.

நீங்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னர் அரச ஒடுக்குமுறைக்கு எதிராக கொண்டிருந்த நிலைப்பாடுகளில் இருந்து ஆட்சிக்கு வந்த பின்னர் தடம்மாறி பயணிக்கின்றீர்கள்.

உண்மைக்குப் புறம்பான தேர்தல் வாக்குறுகளையும் தகவல்களையும் கூறுகின்றீர்கள். தமிழ்த் தேசிய இனத்தின் மீதான அடக்குமுறைகளுக்கு தீர்வினை வழங்க மறுக்கின்றீர்கள். நான் எமது மக்களுக்கு எதிராக அரசுமேற்கொண்ட பாரதூரமான மனித உரிமைகள் குறித்த சாட்சியங்களை பதிவு செய்வதில் கூட தங்களுடன் இணைந்து பணியாற்றினேன். இவ்வாறாக எல்லாவற்றினையும் அறிந்த நீங்கள் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட பாரதூரமான மனித உரிமை மீறல்களுக்கு அரசாக தங்கள் பொறுப்புச் சொல்லாது காலத்தினை கடத்துகின்றீர்கள்.

அரச ஒடுக்குமுறைக்கு எதிரான உணர்வு எம்மை ஒரு புள்ளியில் அன்று அரசியலுக்கு அப்பால் இணைத்தது.

அமைச்சர் சந்திரசேகரன் ஊடாக லலித் மற்றும் குகன் தோழர்களும் எனக்கு அறிமுகமாகினர். ஏன் ஜனாதிபதி அநுர கூட அரச ஒடுக்குமுறைக்கு எதிரான எதிர்ப்பு ஊடகப்பணி நிமிர்த்தமாக தொடர்பிலிருந்தவர்.

வலிகாமம் கிழக்கில் ஆவரங்காலில் வைத்து அரச படைகளால் கடத்தப்பட்டமைக்கான நீதிமன்ற சாட்சியமாக முன்னாள் அமைச்சர் கெகலிய ரம்புக்கல உள்ளர். ஏன் இன்னும் நடவடிக்கை இல்லை. காணாமலாக்கப்படுதலில் படையினர் காட்டிக்கொடுக்கப்பட்டு விடுவர் என அரசாங்கம் அஞ்சுகின்றதா?

வரலாற்று ரீதியில் தமிழ் மக்களாகிய நாம் ஏமாற்றப்பட்டுவிட்டோம். நீங்கள் இனவாதத்தை ஒழிப்பதாக சொன்னீர்கள். சட்டத்தின் ஆட்சியை ஏற்படுத்துவதாக சொன்னீர்கள். அரச அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி என்றீர்கள். பெரும் வெற்றியைச் சந்தித்துள்ள தங்கள் அரசாங்கம் இவற்றை செயற்பாட்டில் காட்டாது தற்போது செல்வாக்கிழந்துள்ள நிலையில் அதுபற்றி கேள்வி எழுப்பும் எம்மையும் நடவடிக்கையினையும் குறைத்த மதிப்பிடக்கூடாது எனக் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்