அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நீண்ட காலமாக ஒத்தி வைக்கப்பட்டிருக்கும் மாகாண சபை தேர்தல்களை விரைவில் நடத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று கூறியதை தேசிய சமாதானப் பேரவை வரவேற்றுள்ளது
அத்துடன் மாகாண சபை முறையைப் பலப்படுத்துவதற்கு ஆளுநர்களின் அதிகாரங்களை குறைத்து மக்களினால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளுக்கு கூடுதல் அதிகாரங்களை அளிப்பது குறித்து ஆராய அமைச்சர்கள் மட்டத்திலான குழுவொன்றை நியமிக்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருக்கிறது.
இதுதொடர்பில் ‘பொருளாதாரத்தை பாதுகாக்கவும் நல்லிணக்கத்தை மேம்படுத்தவும் அவசரமான சீர்திருத்தங்கள் தேவை’ என்ற தலைப்பில் பேரவையின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி ஜெகான் பெரேரா விடுத்திருக்கும் அறிக்கையொன்றில் கூறப்பட்டிருப்பதாவது,
இலங்கையின் ஏற்றுமதிகள் மீது விதிக்கப்படவிருக்கும் வரிகள் தொடர்பாக அமெரிக்க அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தைகளை நடத்துவதற்கு இலங்கைக்கு மூன்று மாத கால அவகாசம் கிடைத்திருக்கிறது.
இலங்கையின் மிகப்பெரிய ஏற்றுமதிச் சந்தையாக அமெரிக்கா விளங்குவதால் இந்த வரி விதிப்பு அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி.ப்ளஸ் வரிச் சலுகையை தற்போது அனுபவித்துவரும் இலங்கை அதன் ஏற்றுமதி சந்தைகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துடனும் இதையொத்த சவாலை எதிர்நோக்குகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிக்குறைப்பு சலுகையை இலங்கை தொடர்ந்து அனுபவிக்க வேண்டுமானால் மனித உரிமைகள் தொடர்பான 27 விசேடமான சமவாயங்களை உறுதியாகப் பின்பற்ற வேண்டும் என்ற நிபந்தனை இருக்கிறது.
அமெரிக்கா, சீனா, ஐரோப்பா அல்லது இந்தியா என்று எந்த முக்கியமான வல்லரசுடனும் ஒத்துழைப்பு உறவுமுறையொன்றைக் கொண்டிருக்க வேண்டியது அவசியமானது என்ற யதார்த்த நிலையை ஏற்றுக்கொண்டு வாழ்வதற்கு அரசியல் தலைமைத்துவம் உட்பட இலங்கையர்கள் பழகிக்கொள்ள வேண்டும்.
ஜி.எஸ்.பி.ப்ளஸ் வரிச்சலுகை தொடர்ந்து கிடைப்பதற்கு இலங்கை பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை விதந்துரைக்கும் தீர்மானம் ஒன்றை ஐரோப்பிய பாராளுமன்றம் 2021 ஆம் ஆண்டில் நிறைவேற்றியது என்பதை தேசிய சமாதானப் பேரவை சுட்டிக்காட்ட விரும்புகிறது.
1979ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம் அடாத்தான கைதுகள், நீண்டகால தடுப்புக்காவல், மட்டப்படுத்தப்பட்ட நீதித்துறை மேற்பார்வை, சந்தேக நபர்கள் பொலிஸாருக்கு அளிக்கப்படும் ஒப்புதல் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்களை குற்றவாளிகளாக காண்பது ஆகியவற்றுக்கு அனுமதிக்கும் ஏற்பாடுகளைக் கொண்டிருப்பதன் காரணத்தினால் பரந்தளவில் மிகவும் கடுமையான கண்டனத்துக்கு உள்ளாகி வந்திருக்கிறது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பயங்கரவாத தடைச்சட்டம் மிகவும் மோசமான முறையில் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வரலாறு இருக்கிறது.
விசாரணைகளை துரிதப்படுத்தாமல் அரசாங்கங்கள் ஆட்களை நீண்டகாலத்துக்கு தடுத்து வைப்பதற்கும் பயங்கரவாத தடைச்சட்டம் அனுமதித்திருக்கிறது. கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் பாராளுமன்ற தேர்தலிலும் ஆளும் தேசிய மக்கள் சக்தி பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒழிப்பதாக வாக்குறுதியளித்தது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான விதப்புரைகளைச் செய்வதற்கு குழுவொன்றை நியமிப்பதற்கு நீதியமைச்சர் சமர்ப்பித்த யோசனையை அமைச்சரவை அங்கீகரித்திருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் செய்த அறிவிப்பை தேசிய சமாதானப் பேரவை வரவேற்கிறது.
பயங்கரவாத தடைச் சட்டம் இல்லாமலேயே குற்றச் செயல்களைக் கையாளக்கூடிய சட்டங்கள் இருக்கின்றன.
அவை மிதமிஞ்சியவையாக உள்ளன என்று பலரும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒழிப்பதாக தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்ட நிலையில், அந்த சட்டத்தை ஒழிப்பது தொடர்பாக ஆராய குழுவொன்றை நியமிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் ஜி.எஸ்.பி ப்ளஸ் வரிச் சலுகையை புதுப்பிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் வித்தக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதற்கு காலத்தை இழுத்தடிக்கும் ஒரு செயற்பாடாக நோக்கப்படக்கூடாது.
காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினை, போர்க்கால மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்காலத்தில் இராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்ட காணிகளை அவற்றின் உரிமையாளர்களுக்கு திருப்பிக் கையளித்தல் போன்ற நீண்டகால பிரச்சினைகளுக்கு தீராவுகளைக் காண்பதற்கு துரிதமானதும் பயனுறுதியுடையதுமான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும் என தேசிய சமாதானப் பேரவை வலியுறுத்தியுள்ளது

