கொழும்பு – புதுக்கடை நீதிமன்றத்துக்குள் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ‘கணேமுல்ல சஞ்சீவ’ என்பவரை சுட்டுக் கொலை செய்வதற்கு துப்பாக்கிதாரிக்கு உதவி செய்ததாக கூறப்படும் இஷாரா செவ்வந்தி
மற்றும் 2010 ஆம் ஆண்டில் போலி ஆவணங்களை தயாரித்து கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள அரச காணி ஒன்றை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர ஆகிய இருவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவிக்கையில்,
‘கணேமுல்ல சஞ்சீவ’ என்பவரின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதியிலிருந்து மாயமாகியுள்ளார்.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர மார்ச் மாதம் 07 ஆம் திகதியிலிருந்து மாயமாகியுள்ளார்.
பிரசன்ன ரணவீரவை கைது செய்வதற்காக களனி பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற போதும் அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இஷாரா செவ்வந்தி மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை.
இது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இஷாரா செவ்வந்தி மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோர் நாட்டை விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

