உள்ளூர் முக்கிய செய்திகள்

அநுர அரசு தொழிலாளர்களின் உழைப்பினை சுரண்டுகின்றதென சஜித் பிரேமதாச மேதின குற்றச்சாட்டு

சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எட்டிய இணக்கப்பாட்டுக்கமைய ஊழியர் சேமலாப நிதி, நம்பிக்கை நிதியை சீர்குலைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த கொள்கைக்கு பின்னால் சென்று தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் தொழிலாளர்களின் உழைப்பினை சுரண்டும் திட்டங்களை அவ்வாறே நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றார். தொழிலாளர்களது உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தி என்றும் பாடுபடும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்தார்.

தலவாக்கலையில் இன்று நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிகையில்,

தொழிலாளர் வர்க்கத்தினரே எமது நாட்டின் உயிர் மூச்சாவர். அவர்களது உழைப்பும் வியர்வையுமே நாட்டை வாழ வைத்துக்கொண்டிருகின்றன.

இந்த யுகம் தொழிலாளர்களின் உரிமைகள் ஒழிக்கப்படும் யுகமாகும். தொழில் புரியும் மக்களின் ஊழியர் சேமலாப நிதி, நம்பிக்கை நிதியில் கொள்ளையடிக்கும் யுகமே தற்போது காணப்படுகிறது. கடந்த அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டுக்கமைய மேற்கொண்ட கடன் மறுசீரமைப்பினால் ஊழியர் சேமலாப நிதி, நம்பிக்கை நிதியை சீர்குலைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதியின் அந்த கொள்கைக்கு பின்னால் சென்று தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் தொழில் செய்யும் மக்களின் உழைப்பினை சுரண்டும் திட்டங்களை அவ்வாறே நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றார்.

உங்களது உரிமைகளைப் பாதுகாப்பதற்கு இன்றைய தினத்தில் மாத்திரமின்றி எதிர்காலத்திலும் நாம் பாடுவோம் என தொழிலாளர்களுக்கும் பெருந்தோட்ட மக்களுக்கும் உறுதியளிக்கின்றேன்.

தற்போதைய அராசங்கம் பொய்களைக் கூறியே நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. பொய்களைக் கூறியே ஆட்சியையும் கைப்பற்றியது. பொதுத் தேர்தலிலும் அதனையே செய்தனர். அவர்கள் அன்று வழங்கிய வாக்குறுதிக்கமைய இன்று வரை மக்களுக்கு வளமான நாடோ அழகான நாடோ உருவாகவில்லை.

இந்தத் தேர்தலுக்காக புதிய பொய்களை கட்டவிழ்த்து விட்டிருக்கின்றனர். மூன்றாவது முறையாகவும் மக்களை ஏமாற்றுவதற்கு முற்படும் இந்த யுகத்தில் ஐக்கிய மக்கள் சக்தியே உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் வெற்ற பெறும் என அரசாங்கத்திடமும் ஜனாதிபதியிடமும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இன்று இந்த அரசாங்கம் உர நிவாரணத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறது. இன்று வரை விவசாயிகளுக்கு உர நிவாரணம் வழங்கப்படவில்லை. நெல் உற்பத்திக்கு மாத்திரமே உர நிவாரணம் வழங்கப்படுகிறது. உர நிவாரணத்தை நீக்கி உரங்களின் விலைகளை அதிகரித்திருக்கின்றன.

விவசாயத்துக்கு தரமான உரங்கள் வழங்கப்படுவதில்லை. மனிதன் – யானை மோதலுக்கு எவ்வித தீர்வும் முன்வைக்கப்படவில்லை. இயற்கை அனர்த்தங்களால் பயிர்களை அழிவடைந்த விவசாயிகளுக்கு இதுவரையில் இழப்பீடு வழங்கப்படவில்லை.

மின் கட்டணம் குறைக்கப்படவில்லை. முன்னாள் ஜனாதிபதி ரணிலின் நாணய நிதிய இணக்கப்பாட்டை செயற்படுத்தும் அநுர குமார திஸாநாயக்க தேர்தலின் பின்னர் மின் கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

நீடிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் கீழ் நான்காம் கட்ட தொகையை வழங்க முன்னர் மின் கட்டணத்தை அதிகரிப்பதாக அரசாங்கம் நாணய நிதியத்திடம் உறுதியளித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இது தான் 33 சதவீத மின் கட்டண குறைப்பா? எதற்காக இவ்வாறு பொய் கூறுகின்றனர்? மக்களை ஏன் ஏமாற்றுகின்றீர்கள்?

உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் அரசாங்கத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

துறைமுகத்தில் தரையிறக்கப்படும் விலைக்கே மக்களுக்கும் எரிபொருட்களை வழங்குவதாகக் கூறினர். அன்று அமைச்சர்கள் தரகுப் பணம் பெற்றதால் தான் அந்த விலைக்கு கடந்த அரசாங்கத்தால் எரிபொருளை வழங்க முடியாது போனதாக அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார். அவ்வாறெனில் தற்போது அந்த விலைக்கு வழங்கப்படாததற்கு என்ன காரணம்?

முதலாவது வரவு – செலவு திட்டத்திலேயே 35,000 பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்குவதாகக் குறிப்பிட்டனர். வறுமை ஒழிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனக் குறிப்பிட்டனர். அவை அனைத்தும் இன்று பொய் மலையாகக் குவிந்துள்ளன.

இந்த பொய்யான அரசாங்கத்துக்கு சிறந்த பாடமொன்றை புகட்டுவதற்கு இம்முறை ஐக்கிய மக்கள் சக்தி பாரிய வெற்றியை மக்கள் வழங்க வேண்டும். மக்களுக்கு தேவையான உப்பினைக் கூட வழங்க முடியாத அரசாங்கம் வெட்கப்பட வேண்டும்.

இவை மாத்திரமின்றி இன்று நாட்டில் சட்டம் ஒழுங்கு நடைமுறையில் இல்லை.

பாதாள உலகக் குழுக்கள் சட்டத்தை கைகளில் எடுத்துள்ளன. வீடுகளுக்கே வந்து கொலை செய்கின்றனர். வீட்டிலும், வீதிகளிலும், தொழில் ஸ்தானங்களிலும், நீதிமன்ற பூமியிலும் மிக சரளமாக கொலைகள் இடம்பெறுகின்றன.

இந்த அச்சுறுத்தலிலிருந்து நாட்டை மீட்பதற்கான வேலைத்திட்டத்தை நாம் முன்னெடுப்போம். கிராமிய மட்டத்திலிருந்து பாதுகாப்பு குழுக்கள் நிறுவப்பட்டு கொலைகாரர்கள், கொள்ளையர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்