உள்ளூர் முக்கிய செய்திகள்

தமிழ் அரசுக் கட்சி தந்தை செல்வாவின் கொள்கைகளுடன் பயணிக்க முன்வந்தால் அதனுடன் பேச்சு தயாரென கஜேந்திரகுமார் தெரிவிப்பு

தமிழ் அரசுக் கட்சி தவறான கொள்கையைக் கைவிட்டு அந்தக் கட்சியை நிறுவிய தந்தை செல்வநாயகத்தின் கொள்கையின்படி நேர்மையாக பயணிக்க முன்வந்தால் நாம் நிச்சயமாக அவர்களுடன் பேச்சு நடத்தி பொது இணக்கப்பாட்டுக்கு வந்து இணைந்து பயணிப்போம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

அல்வாய் மாலுசந்தி மைக்கேல் விளையாட்டுக்கழக மைதானத்தில் தமிழ்த் தேசிய பேரவை நேற்று (01-05) இரவு நடத்திய மே தினக் கூட்டத்தில் உரையாற்றியபோதே இதனை தெரிவித்தார்.

இக் கூட்டத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இந்த உள்ளூராட்சி சபைகள் தேர்தலில் தமிழ் மக்கள் மிகத் தெளிவாக – ஆணித்தரமாக தங்கள் வாக்குகளை செலுத்தாது விட்டால் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கைவிட்டுவிட்டார்கள் என்று சந்தேகிக்கப்படுவது உறுதியானதாகி விடும்.

ஒரு முறை மாறிப் போடலாம். அதை நியாயப்படுத்தலாம். அடுத்ததடுத்த தேர்தல்களிலும் இவ்வாறு நடந்தால் அதனை நியாயப்படுத்த முடியாது. அந்த வகையில் இது சாதாரண உள்ளூராட்சி தேர்தல் அல்ல.

முகங்களுக்கு வாக்களிக்கும் இந்தத் தேர்தல்தான் தமிழ் மக்கள் தங்களின் அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தும் தேர்தலாக மாறியுள்ளது.

இது கஷ்ட காலமாகும். எனவே, எமது மக்கள் ஆழமாக சிந்தித்து எமது வாக்குகளை செலுத்த வேண்டும். தமிழ்த் தேசத்தைப் பொறுத்தவரையில் இன்று இரு முக்கியமான விடயங்கள் உள்ளன.

ஒன்று இனப்படுகொலைக்கு பொறுப்புக்கூறல் மற்றது இனப்பிரச்னைக்கு அரசியல் தீர்வு காணுதலாகும். இந்த விடயங்களில், ஜே. வி. பி. என்ற தேசிய மக்கள் சக்திக்கும் இதற்கு முன்னர் ஆட்சி செய்த இனவாத கட்சிகளுக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை.

நாம் தமிழ் அரசுக் கட்சிக்கு எதிரானவர்கள் அல்லர். 2010இல் நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு வெளியே வந்தபோது தலைமைத்துவம்தான் பிரச்னை என்று கூறினோம்.

தலைமைத்துவத்தைத் தோற்கடிக்க வேண்டும் என்பதால்தான் அப்போது, திருகோணமலையிலும் யாழ்ப்பாணத்திலும் மட்டும் போட்டியிட்டோம்.

இன்றும் நாம் சொல்கிறோம். தமிழ் அரசுக் கட்சியின் தலைமைத்துவம்தான் இன்றும் பிரச்னை. தலைமைத்துவம் தவறாக நடப்பதால் ஒட்டுமொத்த கட்சியும் தவறான பாதையில் கொண்டு செல்லும் நிலைமைதான் இன்றுள்ளது.

அந்தக் கட்சிக்குள் இருக்கும் நேர்மையானவர்கள் சரியான முடிவை எடுக்க இந்தத் தேர்தல் ஒரு சந்தர்ப்பமாக இருக்க வேண்டுமானால் கட்சிக்குள் இருக்கும் அவர்கள் விவாதத்தை உருவாக்க வேண்டுமானால் எந்தளவுக்கு தேசிய மக்கள் சக்தியை ஓரங்கட்ட வேண்டுமோ அதேயளவுக்கு தமிழ் அரசுக் கட்சியையும் ஓரங்கட்டவேண்டும்.

அப்படி ஒரு தெளிவான பாடம் கற்பித்தால் மட்டும்தான் தமிழ் அரசுக் கட்சிக்குள் இருக்கக்கூடிய நேர்மையான உறுப்பினர்கள் மேலோங்க முடியும். தவறான தலைவர்களை வெளியேற்ற முடியும்.

இது தமிழ் அரசுக் கட்சியை தோற்கடித்து – முற்றுமுழுதாக ஓரங்கட்டும் செயல்பாடு அல்ல. அப்படி செய்ய முடியாது – செய்யவும் கூடாது.

தமிழ் அரசுக் கட்சி தவறான கொள்கையை கைவிட்டு அந்தக் கட்சியை நிறுவிய தந்தை செல்வநாயகத்தின் கொள்கையின்படி நேர்மையாக பயணிக்க முன்வந்தால் அந்தக் கட்சியின் தவறான தலைமைத்துவத்தை மாற்றி

திருத்தி சரியான பாதைக்கு அவர்கள் வருவதாக இருந்தால் நாம் நிச்சயமாக அவர்களுடன் பேச்சு நடத்தி பொது இணக்கப்பாட்டுக்கு வந்து இணைந்து பயணிப்போம் என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்