வடக்கு மற்றும் கிழக்கு உள்ளூராட்சி மன்றங்களில் கூட்டாட்சியை ஏற்படுத்துவது குறித்து தேசிய மக்கள் சக்தி பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேராத், இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல்கள் வெற்றியளித்துள்ளதாகவும் ஆளும் தேசிய மக்கள் சக்தியுடன் ஒன்றிணைந்து பயணிப்பதற்கு வடக்கு கிழக்கு அரசியல் தரப்புகள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
நடைப்பெற்று முடிவடைந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நாடு முழுவதும் பெறப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை அடிப்படையில் ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதிகப்படியான வாக்குகளை பெற்றுள்ளது.
இதன்படி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் களமிறங்கிய தேசிய மக்கள் சக்தி கட்சியானது 4,503,930 வாக்குகளையும் 3,927 உறுப்பினர்களையும் பெற்றுள்ளது.
இரண்டாவது நிலையாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி 2,258,480 வாக்குகளையும் 1,767 உறுப்பினர்களையும் பெற்றுக்கொண்டது.
2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 4.94 மில்லியன் வாக்குகளைப் பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இம்முறை நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 954,517 வாக்குகள், 742 உறுப்பினர்களை பெற்று பின்னடைவை சந்தித்துள்ளது.
ஆனால் ஆளும் தேசிய மக்கள் சக்தி வடக்கு மற்றும் கிழக்கில் பின்னடைவுகளை சந்தித்துள்ளதுடன், தென்னிலங்கையிலும் ஒரு சில உள்ளுராட்சி மன்றங்களில் தனித்து ஆட்சியமைப்பதற்கு பெரும்பான்மை இல்லாத நிலை உள்ளது.
இவ்வாறானதொரு நிலையில் வெற்றிப்பெற்ற சுயேட்சை குழுக்கள் உள்ளிட்ட சில அரசியல் கட்சிகளுடன் ஒன்றிணைந்து உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பது தொடர்பில் தேசிய மக்கள் சக்தி பேச்சுவார்த்கைளை முன்னெடுத்து வருகிறது.

