சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதியுதவிச் செயற்திட்டத்தின்கீழ் வலியுறுத்தப்பட்டுள்ள ஆட்சியியல் நிர்வாகம் மற்றும் ஊழல் ஒழிப்பு மறுசீரமைப்புக்களை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கத்தின் முன்னேற்றத்தைக் கண்காணிப்பதற்கான ‘அரசாங்கத்தின் செயற்திட்ட ட்ரக்கர்’ எனும் சுயாதீன இணையவழித்தளத்தை ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா அமைப்பு அறிமுகப்படுத்தியுள்ளது.
இலங்கையின் மறுசீரமைப்பு செயன்முறையில் பொறுப்புக்கூறலை வலுப்படுத்தும் நோக்கிலான ஓர் நடவடிக்கையாக இந்த கண்காணிப்பான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
‘ஊழல், தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு மற்றும் பொறுப்பற்ற ஆட்சிமுறை ஆகியவற்றை முடிவுக்குக்கொண்டுவருமாறுகோரி உருவான ‘அரகலய’ எனும் மாபெரும் மக்கள் எழுச்சிப்போராட்டம் இடம்பெற்று இரண்டு ஆண்டுகளின் பின்னர், நாடு பல தசாப்தகால தவறான முகாமைத்துவம் மற்றும் பலவீனமான ஆட்சிமுறைக் கட்டமைப்புக்களின் தோல்வியுடன் தொடர்ந்து போராடி வருகிறது’ என ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின் பரிந்துரைகளுக்கு அமைவாக முக்கிய நிபந்தனைகளை நிறைவேற்றுவதாக இலங்கை அரசாங்கம் உறுதியளித்ததாகவும், அது நாட்டின் தற்போதைய மீட்சி முயற்சிகளின் முக்கிய அம்சமாகக் காணப்படுவதாகவும் அவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை ‘இம்மறுசீரமைப்புக்கள் மிகமுக்கியமானவை எனும் போதிலும், அரசாங்கத்தின் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்வதற்குரிய உத்தியோகபூர்வ கண்காணிப்புப்பொறிமுறை எவையும் இல்லை. செயற்திறன்மிக்க கண்காணிப்புப்பொறிமுறை மற்றும் பொது அறிக்கையிடல் என்பன இல்லாததால், நாட்டுமக்களும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களும், ஏனைய பங்குதாரர்களும் ஆக்கபூர்வமான மாற்றங்கள் இடம்பெறுகின்றவா என்பது குறித்து அறியமுடியாத நிலையில் இருக்கின்றனர்.
இந்த இடைவெளியை நிரப்புவதற்காகவே ‘அரசாங்கத்தின் செயற்திட்ட ட்ராக்கர்’ உருவாக்கப்பட்டுள்ளது. இச்சுயாதீன கருவியின் ஊடாக அரசாங்கம் அதன் மறுசீரமைப்பு உத்தரவாதங்களை நடைமுறைப்படுத்துகின்றதா எனப் பகிரங்கமாகக் கண்காணிக்கமுடியும்’ என்றும் ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா அமைப்பு தெரிவித்துள்ளது.

