வடக்கு மாகாணத்திலுள்ள காணிகள் தொடர்பில் கடந்த மார்ச் மாதம் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நீக்கப்படவேண்டும் என பிரதமருடனான சந்திப்பில் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உறுதியாக வலியுறுத்தியதை அடுத்து, இதுபற்றி காணி அமைச்சின் அதிகாரிகளுடன் ஆராய்ந்து தீர்வு வழங்கப்படும் என அரசாங்க தரப்பு உறுதியளித்துள்ளது.
அரசாங்கத்தினால் காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின்கீழ் 28.03.2025 ஆம் திகதியிடப்பட்டு, 2430 இலக்கமிடப்பட்டு பிரசுரிக்கப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவித்தலில் வடக்கில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ள 5940 ஏக்கர் காணிகளை 3 மாதகாலத்துக்குள் எவரும் உரிமை கோராதுவிடின், அவை அரச காணிகளாகப் பிரகடனப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அவ்வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் வட, கிழக்கு தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புக் கிளம்பியதை அடுத்து, இவ்விவகாரம் குறித்து கலந்துரையாடும் நோக்கில் வெள்ளிக்கிழமை மு.ப 11 – பி.ப 1 மணிவரை பாராளுமன்றத்தில் பிரதமர் ஹரினி அமரசூரிய தலைமையில் அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும், வட, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அச்சந்திப்பில் அரசாங்கத்தின் சார்பில் பிரதமர் ஹரினி அமரசூரிய, விவசாய, கால்நடை மற்றும் காணி அமைச்சர் கே.டி.லால்காந்த, பிரதியமைச்சர் சுசில் ரணசிங்க, அவ்வமைச்சின் செயலாளர் டி.பி.விக்ரமசிங்க, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விக்கும் டி ஆக்ரு, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதாந்ரி, காணிப்பதிவு திணைக்களத்தின் அதிகாரிகள், மாவட்ட அரசாங்க அதிபர்கள் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
அதேபோன்று வட, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் எஸ்.சிறிதரன், சத்தியலிங்கம், ரவிகரன், கோடீஸ்வரன் மற்றும் குகதாசன் ஆகியோரும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ரவூப் ஹக்கீம் மற்றும் நிஸாம் காரியப்பர் ஆகியோரும், ஆளும் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அமைச்சர் சந்திரசேகர், பிரதியமைச்சர் அருண் ஹேமசந்திர, ஸ்ரீ பவானந்தராஜா, ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி உள்ளிட்டோரும் கலந்துகொண்டிருந்தனர்.
வர்த்தமானி அறிவித்தலை நீக்குங்கள்
அதன்படி இச்சந்திப்பில் கருத்து வெளியிட்ட சிறிதரன் மற்றும் கஜேந்திரகுமார் உள்ளிட்ட தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், வடக்கிலுள்ள காணிகள் தொடர்பில் வெளியிடப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவித்தல் நீக்கப்படவேண்டும் என ஒருமித்து வலியுறுத்தினர்.
‘மூன்று தசாப்தகால யுத்தம், அதன் விளைவாக நிகழ்ந்த இடப்பெயர்வுகள், சுனாமி போன்ற பல்வேறு காரணங்களால் வட, கிழக்கில் வாழும் பெரும்பான்மையான மக்களிடம் அவர்களது காணிகள் தொடர்பான ஆவணங்கள் இல்லை. அதன் காரணமாக அவர்கள் தமது காணி தொடர்பான உரித்தை நிரூபிக்கமுடியாத நிலையில் உள்ளனர். அதேபோன்று அம்மாகாணங்களைச்சேர்ந்த பலர் போரின் விளைவாகவும், பயங்கரவாதத்தடைச்சட்டம் உள்ளிட்ட ஒடுக்குமுறைச்சட்டங்களின் பிரயோகத்தினாலும், ஏனைய அச்சுறுத்தல்களாலும் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசித்துவருகின்றனர். அவர்களில் சிலரிடம் காணி உரித்து தொடர்பான ஆவணம் இருப்பினும், அவர்கள் மீண்டும் நாட்டுக்கு வருகைதருவதற்கு அஞ்சுகின்றனர். அத்தோடு வட, கிழக்கில் வசிக்கும் பலர் இத்தகையதோர் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது குறித்து அறியாதுள்ளனர்’ எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
அரசாங்கத்தின் நோக்கத்தில் சந்தேகம்
அதுமாத்திரமன்றி இவ்வாறான வர்த்தமானி அறிவித்தல்கள் மற்றும் சுற்றுநிருபங்கள் ஊடாக அரசாங்கத்தினால் மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்ட வரலாறு இலங்கைக்கு இருப்பதனாலும், இவ்வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் பல்வேறு கேள்விகள் எழுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
‘வட, கிழக்கு மக்கள் முகங்கொடுத்துவரும் காணி தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பது தான் அரசாங்கத்தின் நோக்கம் எனின், அதற்கு குறித்த காலப்பகுதிக்குள் காணிகள் உரிமை கோரப்படாதவிடத்து, அவை அரசுடைமையாக்கப்படுவதற்கு இடமளிக்கக்கூடிய சட்டத்தைப் பிரயோகிக்கவேண்டிய அவசியமில்லை. மாறாக காணிகளுக்கான உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கு, அவசியமேற்படும் பட்சத்தில் புதியதொரு சட்டத்தை உருவாக்கலாம்.
கரையோரப்பகுதிகளை இலக்குவைப்பது ஏன்?
அதேபோன்று வட, கிழக்கில் பெரும்பாலும் சகல மாவட்டங்களிலும் காணிப்பிரச்சினை நிலவுகின்றது. அவ்வாறிருக்கையில் ஏனைய மாவட்டங்களை விடுத்து, வடக்கில் கரையோரப்பகுதிகளாக இருக்கக்கூடிய யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களை மாத்திரம் இலக்குவைத்து இவ்வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருப்பது அரசாங்கத்தின் நோக்கம் தொடர்பில் சந்தேகங்களைத் தோற்றுவிக்கின்றது’ என்றும் தமிழ்ப்பிரதிநிதிகள் எடுத்துரைத்தனர்.
ஆளுங்கட்சி எம்.பி அருணும் ஆமோதித்தார்
அதனை ஆமோதித்த ஆளும் தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அருண் ஹேமசந்திர, இவ்வர்த்தமானி அறிவித்தல் மேற்குறிப்பிட்டவாறான காரணங்களால் தமிழ்மக்கள் மத்தியில் பலத்த குழப்பங்களைத் தோற்றுவித்திருப்பதாக ஏற்றுக்கொண்டார்.
காணிகளை அபகரிப்பது அரசின் நோக்கமல்ல
தமிழ்ப்பிரதிநிதிகளின் கருத்துக்களை செவிமடுத்த பிரதமர் ஹரினி அமரசூரிய, அரசாங்கம் இவ்வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டதன் நோக்கம் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை அபகரிப்பது அல்ல எனவும், மாறாக அவர்கள் முகங்கொடுத்துவரும் காணி தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதே நோக்கம் எனவும் விளக்கமளித்தார்.
இருப்பினும் தமிழ்ப்பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியவாறான சிக்கல்கள் காணப்படுவதனையும், அதன்விளைவாக குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதன் நோக்கத்தை உரியவாறு அடைந்துகொள்ளமுடியவில்லை என்பதனையும் பிரதமர் ஏற்றுக்கொண்டார்.
அதிகாரிகளுடன் ஆராய்ந்து விரைவில் தீர்வு
அதனையடுத்து கருத்துரைத்த காணி அமைச்சர் லால்காந்த, இவ்விடயம் தொடர்பில் அமைச்சின் ஏனைய அதிகாரிகளுடன் கலந்துரையாடி, வெகுவிரைவில் தீர்வொன்றை அறிவிப்பதாக உறுதியளித்தார்.

