அண்மையில் நடைபெற்றுமுடிந்த உள்ளுராட்சிமன்றத ;தேர்தல்களின் அடைந்த பின்னடைவை அடுத்து, வெகுவிரைவில் மாகாணசபைத்தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் விரும்பாது எனவும், ஆகவே அதனைத் தொடர்ந்து இழுத்தடிப்புச்செய்து காலதாமதப்படுத்துவதற்கே முற்படும் எனவும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும், வடமாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனால் தனிநபர் சட்டமூலமொன்றை சமர்ப்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டு கடந்த வியாழக்கிழமை (22-05) வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு அமைச்சு மட்டத்தில் ஆரம்பகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும், அதனை விரைவாக நடத்துவதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்கும் என எதிர்பார்ப்பதாகவும் மாகாணசபைகள், உள்ளுராட்சிமன்றங்கள் மற்றும் பொதுநிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன வெள்ளிக்கிழமை (23-05) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துக் கருத்து வெளியிட்ட விக்னேஸ்வரன், 2018 ஆம் ஆண்டிலிருந்து மாகாணசபைகளுக்கான தேர்தல் தொடர்ச்சியாகப் பிற்போடப்பட்டுவரும் நிலையில், இனியும் தாமதமின்றி அத்தேர்தலை நடத்தவேண்டும் என்றே தான் தொடர்ச்சியாக வலியுறுத்திவருவதாகத் தெரிவித்தார்.
இருப்பினும் கடந்த பாராளுமன்றத்தேர்தலுடன் ஒப்பிடுகையில், அண்மையில் நடைபெற்றுமுடிந்த உள்ளூராட்சிமன்றத்தேர்தல்களின் ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பின்னடைவைச் சந்தித்திருப்பதனால், மாகாணசபைத்தேர்தலை நடத்தாமல் இழுத்தடிப்பதற்கே அரசாங்கம் முற்படும் எனத் தான் கருதுவதாகவும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
மாகாணசபைத்தேர்தலை நடாத்தி, அதனூடாக சில சபைகள் ஏனைய கட்சிகள்வசம் செல்வதை அரசாங்கம் ஒருபோதும் விரும்பாது. ஆகவே இவ்வருடமும் மாகாணசபைத்தேர்தலை நடத்தாமல் காலந்தாழ்த்துவதற்கே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முற்படும் என அவர் விசனம் வெளியிட்டார்.

