உள்ளூர் முக்கிய செய்திகள்

உலக வங்கி குழுவினருடன் யாழ் குப்பைகள் தொடர்பில் அரசாங்க அதிபர் கலந்துரையாடல்

யாழ்ப்பாண மாவட்டத்தின் சுற்றுலாத்துறை, கழிவகற்றல் முகாமைத்துவம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி தொடர்பாக உலக வங்கி குழுவினருடனான விரிவான கலந்துரையாடலொன்று யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்று (26-5) பிற்பகல் 3 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் நிலையான பொருளாதார அபிவிருத்தி உட்கட்டுமானம் மற்றும் சுற்றுலாத்துறைகளை விருத்தி செய்வது தொடர்பாக தற்போதைய அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில் உலக வங்கி கடந்த இரண்டு மாதங்களாக பொருத்தமான திட்டங்கள் தொடர்பில் களத்தரிசிப்புக்கள் செய்து ஆராய்ந்து அடிப்படைத் தரவுகளை பெற்றிருந்தது.

இதன் இறுதி அங்கமாக துறை சார்ந்து காணப்படும் அபிவிருத்தி தேவைப்பாடுகள், தடைகள், அபிவிருத்திக்கான வாய்ப்புக்கள் மற்றும் சாத்தியப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து திட்டங்களை நிச்சயப்படுத்தும் வகையில் கடந்த மூன்று தினங்களாக வடக்கு மாகாணத்தில் உள்ள மாவட்ட செயலாளர்களை சந்தித்து வருகின்றனர்.

அந்த வகையில் இன்றைய தினம் உலக வங்கியின் இலங்கை நாட்டுக்கான செயற்பாட்டு முகாமையாளர் அபிட் கலி, செயற்றிட்ட தலைவர் காயத்திரி சிங் மற்றும் உலக வங்கியின் ஏனைய பிரதிநிதிகள் உள்ளிட்ட ஆறு பேர் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து கலந்துரையாடியதுடன், தொடர்ந்து துறைசார் திணைக்களங்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.

இக்கலந்துரையாடலில் அரசாங்க அதிபரால் மாவட்டத்தின் விவசாயம், மீன்பிடி அபிவிருத்திக்கான தேவைகள், அச்சுவேலி மற்றும் காங்கேசன்துறை கைத்தொழில் வலயத்துக்கான புதிய முதலீடுகள், யாழ்ப்பாண கோட்டை மற்றும் யாழ்ப்பாண பழைய கச்சேரி போன்றவற்றை மரபுசார் சுற்றுலா நோக்கில் விருத்தி செய்தல், சரசாலை மற்றும் மண்டைதீவு சிறுதீவுப் பகுதிகளை சூழல்சார் சுற்றுலா மையங்களாக மாற்றுதல், நெடுந்தீவினை சுற்றுலா நோக்கில் முழுமையான அபிவிருத்தி கொண்ட தீவாக மாற்றுதல் போன்ற விடயங்களுடன், யாழ்ப்பாண மாவட்டத்தில் பிரதேச ரீதியாக டிஜிட்டல் அடிப்படையிலான வானிலை அவதானிப்பு நிலையங்களை நிறுவுதல் போன்றவற்றுக்கான நிதி தேவைப்பாடு குறித்து எடுத்துக்கூறப்பட்டது.

மேலும், மீன்பிடி படகுத்தள அபிவிருத்தி, போதைவஸ்து பாவனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மாகாண ரீதியான புனர்வாழ்வு நிலையம், உளநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மாகாண ரீதியான காப்பகம் மற்றும் யாழ்ப்பாண நகர அபிவிருத்தி வெள்ள வடிகாலமைப்பு அபிவிருத்தி, கழிவு நீர் சுத்திகரிக்கும் செயற்றிட்டம், கழிவகற்றல் முகாமைத்துவம் போன்ற விடயங்களுக்கான அவசியப்பாடு பற்றி உலக வங்கி பிரதிநிதிகளிடம் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலின் இறுதியில் பின்வரும் செயற்றிட்டங்கள் முன்னுரிமையாகவுள்ளதாக உலக வங்கி குழுவினரிடம் முன்வைக்கப்பட்டது.

1. யாழ்ப்பாண நகர வெள்ள வடிகாலமைப்பு அபிவிருத்தி

2. கழிவு நீர் சுத்திகரிக்கும் செயற்றிட்டம்

3. மாவட்டத்தில் உள்ள குளங்களை புனரமைக்கும் செயற்றிட்டம்

4. யாழ் நகர திண்மக்கழிவு முகாமைத்துவம்

5. யாழ்ப்பாண கோட்டை மற்றும் யாழ்ப்பாண பழைய கச்சேரி போன்றவற்றை மரபுசார் சுற்றுலா நோக்கில் விருத்தி செய்தல்

6. யாழ்ப்பாண மாவட்டத்தில் மீன்பிடி படகுத்தளம் மற்றும் மீன்பிடி துறைமுக அபிவிருத்தி

7. அச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்கான புதிய முதலீடுகள்

8. உள்ளூராட்சி சபைகளின் திண்மக்கழிவு முகாமைத்துவம்

இக்கலந்துரையாடலின்போது, உலக வங்கியின் செயற்பாட்டு முகாமையாளர் மற்றும் செயற்றிட்ட தலைவர் ஆகியோர் அரசாங்க அதிபரால் முன்னுரிமைப்படுத்தி முன்வைக்கப்பட்ட செயற்றிட்டங்களை கருத்தில் கொள்வதாகவும், இச்செயற்றிட்டங்கள் தொடர்பான திட்டங்கள், செயற்றிட்ட முன்மொழிவுகள் மற்றும் சாத்தியப்பாட்டு அறிக்கைகள் போன்றவற்றை விரைவில் சமர்ப்பிக்குமாறும் கோரியிருந்தனர்.

இந்த கலந்துரையாடலின் இறுதியில் யாழ்ப்பாண பழைய கச்சேரி வளாகத்துக்கு உலக வங்கிக் குழுவினரை அரசாங்க அதிபர் அழைத்துச் சென்றதையடுத்து, புனரமைப்பின் அவசியம் தொடர்பில் நேரடியாக குழுவினருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க.ஸ்ரீமோகனன், பிரதம கணக்காளர் எஸ் கிருபாகரன், திட்டமிடல் பணிப்பாளர் இ. சுரேந்திரநாதன், பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்டச் செயலாளர், யாழ்ப்பாண மாநகர ஆணையாளர், மாநகர சபை பிரதம பொறியியலாளர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதி மற்றும் உதவிப் பணிப்பாளர்கள், தொல்லியல் திணைக்கள உத்தியோகத்தர்கள், கைத்தொழில் அதிகார சபையின் மாகாண பணிப்பாளர், யாழ்ப்பாண மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் மற்றும் சுற்றுலா துறைசார் உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்