உள்ளூர்

காணி அபகரிப்பு வர்த்தமானி அமைச்சரவைத் தீர்மானத்தை அறிவிக்காது விடில் நாளை (28) மக்கள் போராட்ட முன்னெடுப்பு- சுமந்திரன்

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய கூட்டத்தில் வடமாகாண காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நீக்குவது குறித்து ஏதேனும் அறிவிப்புக்கள் வெளியிடப்படுகின்றவா என அவதானிப்போம். அவ்வாறு வெளியிடப்படாதவிடத்து நாளைய தினம் (28-05) மாபெரும் மக்கள் போராட்டத்தை முன்னெடுப்பதற்குரிய ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின்கீழ் 28.03.2025 ஆம் திகதியிடப்பட்டு, 2430 இலக்கமிடப்பட்டு பிரசுரிக்கப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவித்தலில் வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 5,940 ஏக்கர் காணிகளை 3 மாதகாலத்துக்குள் எவரும் உரிமைகோராதுவிடின், அவை அரச காணிகளாகப் பிரகடனப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருப்பதுடன், அதனை உடனடியாக வாபஸ் பெறுமாறும் வலியுறுத்தியிருக்கின்றனர்.

அதன்படி இம்மாதம் 28 ஆம் திகதிக்கு முன்பதாக மேற்படி வர்த்தமானி அறிவித்தல் நீக்கப்படவேண்டும் எனவும், அன்றேல் வட, கிழக்கு மாகாணங்களில் அரச இயந்திரத்தை ஸ்தம்பிதம் அடையச்செய்யும் வகையில் மாபெரும் மக்கள் போராட்டம் நடத்தப்படும் எனவும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

அவரது கூற்றின்படி 28 ஆம் திகதிக்கு இன்னமும் ஒரு தினமே எஞ்சியிருக்கும் நிலையில், போராட்டத்துக்கான தயார்ப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளவா என வினவியபோதே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

‘இவ்வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் முற்றாக நீக்கவேண்டும் என்பதே எமது வலியுறுத்தலாகும். அதனைவிடுத்து வேறு எத்தகைய தீர்வுகளை வழங்கினாலும் நாம் நிச்சயமாக மக்கள் போராட்டத்தை நடாத்துவோம். அதற்கமைய இன்றைய தினம் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் கூட்டத்தில் இவ்வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் ஏதேனும் தீர்மானம் அறிவிக்கப்படுகின்றதா எனப் பார்ப்போம். அவ்வாறு அறிவிக்கப்படாதவிடத்து, மக்கள் போராட்டத்துக்கான ஆயத்தங்களை மேற்கொள்வோம்’ என சுமந்திரன் குறிப்பிட்டார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்