இலங்கைக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான நல்லுறவினை துடிப்பானதும், பன்முகத்தன்மை வாய்ந்ததுமான கூட்டாண்மையாக மாற்றியமைப்பதை இலக்காகக்கொண்டு நியூஸிலாந்து அரசுடன் இணைந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதற்குத் தாம் தயாராக இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டுக்கு வருகை தந்திருக்கும் நியூஸிலாந்தின் பிரதி பிரதமரும், வெளிவிவகார அமைச்சருமான வின்ஸ்டன் பீற்றர்ஸுக்கும், வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்துக்கும் இடையிலான சந்திப்பை அடுத்து, நேற்று (26-05) வெளிவிவகார அமைச்சில் அவர்களது கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. அச்சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சர் விஜித்த ஹேரத் மேலும் கூறியதாவது:
கடந்த 2021 ஆம் ஆண்டு கொழும்பில் நியூஸிலாந்தின் வதிவிட இராஜதந்திர தூதரகம் நிறுவப்பட்டதும், அதனைத்தொடர்ந்து இவ்வருடத் தொடக்கத்தில் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயம் திறக்கப்பட்டதன் பின்னர் இடம்பெற்றிருக்கும் இந்த உத்தியோகபூர்வ வருகையானது இலங்கையுடனான நியூஸிலாந்தின் வலுவான ஈடுபாட்டைக் காண்பிக்கின்றது.
இது இருநாடுகளுக்கும் இடையில் வலுவடைந்துவரும் கூட்டாண்மையின் முக்கிய மைல்கல்லாகும்.
எமது இருநாடுகளுக்கும் இடையிலான நல்லுறவினை துடிப்பானதும், பன்முகத்தன்மை வாய்ந்ததுமான கூட்டாண்மையாக மாற்றியமைப்பதை இலக்காகக்கொண்டு நியூஸிலாந்து அரசுடன் இணைந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.
நியூஸிலாந்தின் வெளிவிவகார அமைச்சருடனான எனது சந்திப்பின்போது குறிப்பாக வர்த்தகம், முதலீடு, விவசாயம், கல்வி, சுற்றுலா மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் இருதரப்பு நலன்களை மேம்படுத்துவது பற்றி விரிவாகக் கலந்துரையாடினோம்.
அத்தோடு நியூஸிலாந்துடனான வர்த்தக மற்றும் பொருளாதார கலந்துரையாடல் அமர்வொன்றை நிறுவுவது குறித்தும் இதன்போது ஆராய்ந்தோம்.
அதனூடாக இருநாடுகளுக்கும் இடையில் பல்துறைசார் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், இருநாடுகளினதும் வளர்ச்சி மற்றும் சுபீட்சத்தை மேம்படுத்தவும் முடியும் என நம்புகின்றோம்.
அதேபோன்று பால் உற்பத்திகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் என்பன உள்ளடங்கலாக உயர் இயற்திறன்கொண்ட துறைகளில் வர்த்தகத்தொடர்புகளை விரிவுபடுத்துவது குறித்தும் நாம் கலந்துரையாடியதுடன், நியூஸிலாந்தில் இலங்கை உற்பத்திகளுக்கான சந்தை அணுகலை மேம்படுத்துவது பற்றியும் ஆராய்ந்தோம்.
அதேவேளை சுற்றுலாத்துறையைப் பொறுத்தமட்டில் ஆக்கபூர்வமான முறையில் பிரயோகிக்கப்படாத ஆற்றலை அடையாளங்கண்டு, அவற்றை ஊக்குவிப்பதுடன் கூட்டு முதலீடுகளை மேற்கொள்வதற்கும் நாம் இணங்கினோம்.
மேலும் இலங்கையின் இலஞ்சம், ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் நியூஸிலாந்தின் ஊழல் எதிர்ப்பு முகவர் அமைப்புக்கள் ஆகியவற்றுக்கிடையே நேரடி ஒத்துழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பிலும் நாம் இதன்போது கலந்தாலோசித்தோம் எனத் தெரிவித்தார்.

