நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவ பெருவிழா பட்டோலை அடங்கிய காளாஞ்சியை ஆலய சம்பிரதாய முறைப்படி ஆலய கணக்குப்பிள்ளை யாழ். மாநகர சபையினருக்கு இன்று வழங்கிவைத்தார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் ஜூலை 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவப் பெருவிழாவுக்கான ஆலயச் சூழல் பராமரிப்பு, ஆலயத்துக்குச் செல்லும் பக்தர்களுக்கான அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்தல், வீதித் தடைகள் அமைத்து சீரான போக்குவரத்துக்கு வழியமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடும் யாழ். மாநகர சபையினருக்கு ஆலய சம்பிரதாய முறைப்படி இன்றைய தினம் பெருவிழா பட்டோலை அடங்கிய காளாஞ்சி ஆலய கணக்குப்பிள்ளையால் கையளிக்கப்பட்டது.
இதன்போது பாரம்பரிய முறைப்படி யாழ். மாநகர சபை வளாகத்தில் வாழை, தோரணங்கள் கட்டி அலங்காரம் செய்யப்பட்டிருந்தன.

