உள்ளூர்

பரிசோதனையின்றி 323 கொள்கலன் விடுவிப்பு பிமல் ரத்நாயக்கவை கைது செய்ய முடியுமாவென உதய கம்மன்பில ஜனாதிபதிக்கு சவால்

பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களுக்கும், மனித படுகொலைகளுக்கும் நேரடி தொடர்புண்டு என்ற நியாயமான சந்தேகம் எழுகிறது. பாதாளக் குழுக்களின் துப்பாக்கிச்சூட்டினால் இதுவரையில் 30 இற்கும் அதிகளவானோர் உயிரிழந்துள்ளனர். இந்த இரத்தக்கறை அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் கரங்களில் படிந்துள்ளது. சட்டவிரோத செயலில் ஈடுபட்ட அமைச்சர் பிமல் ரத்நாயக்கவை கைது செய்து, முடிந்தால் ரணில் விக்கிரமசிங்கவின் சாதனையை முறியடியுங்கள் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில சவால் விடுத்தார்.

கொழும்பில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

பரிசோதனைகள் ஏதுமின்றி 2025.01.18 ஆம் திகதி சுங்கத்தில் இருந்து 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதாகவும், அந்த கொள்கலன்களில் இருந்த பொருட்கள் என்னவென்பதை உரிய தரப்பினர் வெளிப்படுத்தவில்லை என்றும் சுங்க திணைக்கள சேவை சங்கம் குறிப்பிட்டது.

இந்த கொள்கலன்களை விடுவிப்பதற்கு தான் உத்தரவு பிறப்பித்ததாக கப்பற்றுறை அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார். பிமல் ரத்நாயக்க கப்பற்றுறை அமைச்சராக இருக்கலாம், ஆனால் சுங்கத்திணைக்களத்துக்கு உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் அவருக்கு கிடையாது. ஏனெனில் சுங்கத்திணைக்களம் நிதியமைச்சின் விடயதானங்களுக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் கொள்கலன்களை நிறுத்தி வைப்பதற்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் நெரிசல் நிலை காணப்பட்டது. இதற்கு தீர்வு காண்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவையின் உபகுழுவின் தலைவராக பிமல் ரத்நாயக்க செயற்பட்டார்.இதற்காக சுங்கத்திணைக்களத்துக்கு உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் அவருக்கு அளிக்கப்படவில்லை. கொள்கலன் நெரிசலுக்கு தீர்வு தொடர்பான பரிந்துரைகளை மாத்திரம் அமைச்சரவைக்கு முன்வைக்க இந்த உபகுழுவுக்கு பணிக்கப்பட்டிருந்தது.

பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் என்னவிருந்தது என்பதை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் ஊடாக சுங்கத்திணைக்களத்திடம் 2025.02.28 ஆம் திகதியன்று கோரியிருந்தேன். இந்த கேள்விகளுக்கு சுங்கத் திணைக்களம் 2025.04.03 ஆம் திகதியன்று பதிலனுப்பி வைத்துள்ளது. திணைக்களத்தின் பதில்கள் பூரணமாக இருக்கவில்லை.

விடுவிக்கப்பட்ட 323 கொள்களல்களில் சிவப்பு மற்றும் செம்மஞ்சள் நிறத்தில் முத்திரை பதிக்கப்பட்ட கொள்கலன்கள் எத்தனை என்ற கேள்விக்கு பதிலளிப்பதற்குரிய ஆவணம் தம்மிடம் இல்லை என்று சுங்கத்திணைக்களம் பதிலளித்துள்ளது. அத்துடன் கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் 2025.01.29 ஆம் திகதியன்று வெளியிட்ட ஊடக அறிக்கையை சுங்கத் திணைக்களம் இணைத்துள்ளது.

இந்த கொள்கலன்களில் என்னவிருந்தது என்பதை வெளிப்படுத்த அரசாங்கம் ஏன் இன்றும் பின்வாங்குகிறது. தகவலறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாதாயின் சுங்கத்திணைக்களம் ஏதோவொன்றை மறைக்கிறது. இந்த கொள்கலன்களில் ஆயுதம் மற்றும் ஆயுத இணைப்பு கருவிகள் இருக்கலாம் என்ற பாரியதொரு சந்தேகம் எமக்கு காணப்படுகிறது.

கடந்த நான்கு மாத காலப்பகுதியில் சமூக கட்டமைப்பில் பாதாளக் குழுக்களின் செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களுக்கும், மனித படுகொலைகளுக்கும் நேரடி தொடர்புண்டு என்ற நியாயமான சந்தேகம் எழுகிறது. பாதாளக்குழுக்களின் துப்பாக்கிச்சூட்டினால் இதுவரையில் 30 இற்கும் அதிகளவானோர் உயிரிழந்துள்ளனர்.இந்த இரத்தக்கறை அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் கரங்களில் படிந்துள்ளது.

சுங்கத் திணைக்களம் கப்பற்றுறை அமைச்சின் கீழ் உள்ளடங்காது, நிதியமைச்சின் விடயதானத்துக்குள் உள்ளடங்கும் இவ்வாறான நிலையில் 323 கொள்கலன்களை விடுவிப்பதற்கான உத்தரவை தான் வழங்கியதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். அவ்வாறாயின் அவர் சட்டவிரோத செயலில் ஈடுபட்டுள்ளார். ஆகவே அவரை உடனடியாக கைது செய்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சராக பதவி வகித்த கெஹெலிய ரம்புக்வெல மருந்து கொள்வனவு விவகாரத்தில் கைது செய்யப்பட்டு பல மாதங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டார்.இலங்கை அரசியல் வரலாற்றில் அமைச்சரவை அமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டு பல மாதங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டமை அதுவே முதல்முறையாகும். இவ்விடயத்தில் ரணில் விக்கிரமசிங்க தலையிடவில்லை. சுயாதீன விசாரணைகளுக்கு இடமளித்து சாதனை படைத்தார். இந்த சாதனையை முடிந்தால் முறியடிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு சவால் விடுகிறேன் என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்