ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தாய்மொழி ஆசிரியர் சங்கத்தினர் இன்றைய தினம் வட மாகாண ஆளுநர் தலைமைச் செயலகத்துக்கு முன்னால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டப் பேரணி யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்னால் ஆரம்பமாகி, ஆளுநர் செயலகம் வரை சென்ற பின்னர், அப்பேரணியினரை ஆளுநர் செயலகத்துக்குள் அனுமதிக்காமல் பொலிஸார் வாசலில் தடுத்து நிறுத்தினர்.
பின்னர், போராட்டத்தில் கலந்துகொண்ட சிலர் மட்டும் உள்ளே சென்று ஆளுநருடன் பேசலாம் என தெரிவிக்கப்பட்ட நிலையில், மட்டுப்படுத்தப்பட்ட ஆசிரியர்கள் ஆளுநரை சந்திப்பதற்காக உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
அதனையடுத்து, ஆளுநர் வேதநாயகனை சந்தித்த பேரணியினர் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மஜகர் ஒன்றை ஆளுநரிடம் கையளித்தனர்.
அதன் பின், ஊடகங்களுக்கு அவர்கள் தெரிவிக்கையில்,
யாழிலிருந்து வெளி மாகாணங்களுக்கு ஆசிரியர் சேவையில் ஈடுபட்டவர்களுக்கு, மீண்டும் வெளி மாவட்டங்களுக்கு பணி இடமாற்றம் வழங்கப்படுகிறது.
ஆசிரியர்கள் மருத்துவ காரணங்களுக்காக தமது வெளி மாவட்ட இடமாற்றங்களை இரத்து செய்யுமாறு மேன் முறையீடு செய்துள்ள நிலையில், அதனை கருணை அடிப்படையில் பரிசீலனை செய்ய வேண்டும் ; வெளிமாவட்டம் செல்லாமல் பல ஆசிரியர்கள் தொடர்ந்தும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சேவையாற்றி வரும் நிலையில், பாரபட்சமின்றி இடமாற்றங்களை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை ஆளுநரிடம் முன்வைத்திருக்கிறோம்.
இவ்விடயங்கள் தொடர்பில் பரிசீலனை செய்து விரைவில் சாதகமான முடிவினை அறிவிப்பதாக ஆளுநர் தெரிவித்ததாக குறிப்பிட்டனர்.

