மன்னார் சதோச மனித புதைகுழி தொடர்பில் சில தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பாக மன்றின் ஆஜரான சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்தார்.
மன்னார் சதோச மனித புதைகுழி வழக்கு இன்று மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் சதோச மனித புதைகுழி வழக்கு இன்றைய தினம் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது ஏற்கனவே அழைக்கப்பட்ட சட்டத்தரணிகள் பிரசன்னமாகி இருந்த நிலையில், மன்னார் நீதிமன்ற நீதவான் மற்றும் அழைக்கப்பட்ட நிறுவனத்தினரும் குறித்த சதோச மனித புதைகுழி பகுதியை இன்று காலை நேரடியாகச் சென்று பார்வையிட்டனர்.
இதன் போது சில தீர்மானங்களுக்கு முன் வந்தார்கள்.
குறித்த புதைகுழி பிரதேசத்தை சுத்தப்படுத்துவதாகவும்,நிறம்பியுள்ள நீரை அகற்றவதற்கு நகர சபை இணங்கிக்கொண்டுள்ளதன் அடிப்படையில், குறித்த நீரை அகற்றுவது என்றும்,குறித்த புதைகுழியை பகுதி அளவில் மூடுவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இதன் போது ஏற்கனவே எடுக்கப்பட்ட மண் சதோச நிறுவனத்திடம் காணப்படுகின்றதா?,அது எங்கே இருக்கிறது போன்ற விடையங்களை பொலிஸார் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறும், தீர்மானிக்கப்பட்டது.
அதனடிப்படையில், இந்த வழங்கு மீண்டும் எதிர்வரும் 12 ஆம் திகதி வியாழக்கிழமை (12-06) மேலதிக நடவடிக்கைக்காக அழைக்கப்பட உள்ளது என தெரிவித்தார்.
இதன்போது காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் சட்டத்தரணி ஜெகநாதன் தற்பரன் கருத்துக்களை தெரிவித்தார்.

