இருநாடுகளுக்கும் இடையே நிலவும் நீண்டகால எல்லைப் பிரச்சனையால் நிலைமை கடுமையாகியுள்ளது.
கடந்த மே மாதத்தில் இரு நாட்டு இராணுவத்தினரிடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு கம்போடியா வீரர் உயிரிழந்ததை தொடர்ந்து, இரு நாடுகளுக்கிடையிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கம்போடியாவின் எல்லையை ஒட்டியுள்ள ஏழு மாகாணங்களில் உள்ள அனைத்து நில எல்லை சோதனைச் சாவடிகளிலும் அனைத்து வாகனங்கள் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் கடப்பது கட்டுப்படுத்தப்படும் என தாய்லாந்து இராணுவம் திங்கட்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் தாய்லாந்து, வெளிநாட்டு பயணிகளும் கம்போடியாவுக்குள் நுழைவது தடை செய்யப்பட்டுள்ளது.
சில விசேஷ தேவைக்காக, உதாரணமாக மருத்துவ சிகிச்சை அல்லது கல்வி பயணங்கள் போன்றவை மட்டும் விதிவிலக்கு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வெல்லை மூடலுக்கு முன்னதாக இருநாடுகளும் பல பதிலடி நடவடிக்கைகளை மேற்கொண்டன.
கம்போடியா தாய்லாந்து திரைப்படங்களைத் தடை செய்ததுடன், தாய்லாந்திலிருந்து வரும் இணைய பிணைப்புகளையும் குறைத்தது.
பழங்கள், காய்கறிகள், எரிபொருள் போன்றவற்றின் இறக்குமதியையும் நிறுத்தியுள்ளது.
தாய்லாந்தும் தன்னுடைய எல்லை கட்டுப்பாடுகளை அதிகரித்து, விசா காலத்தை குறைத்துள்ளது.
தாய்லாந்து பிரதமர் பாய்டோங்க்டார்ன் ஷினாவத்ரா, இந்த பிரச்சனையை எதிர்கொள்ளும் விதத்தில் கடும் அரசியல் அழுத்தத்தை எதிர்கொண்டு வருகிறார்.
கம்போடியாவின் முன்னாள் தலைவர் ஹன் செனுடன் தாய்லாந்து பிரதமர் தொலைபேசியில் உரையாடிய குரல் பதிவொன்றும் வெளியானது.
இதில் அவர், ஒரு தாய்லாந்து இராணுவத் தலைவரை விமர்சித்ததுடன், ஹன் செனிடம் ‘உங்களுக்கென்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள், நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று கூறியிருந்தார்.
இந்த உரையாடல், இராணுவத்தைச் சினமடைய செய்ததோடு, அவரது கூட்டணி அரசிலிருந்து ஒரு கட்சி விலக காரணமாகவும் அமைந்தது.
பாய்டோங்க்டார்ன் பின்னர் மன்னிப்பு கோரியதுடன், இது பேச்சுவார்த்தைக்கான உத்தி என்றும் விளக்கம் அளித்தார்.
‘தற்போதைய பாதுகாப்பு சூழ்நிலைக்கு ஏற்ப, குறிப்பாக தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையிலான பகுதிகளில் அரசியல் ரீதியாகவும், இராஜதந்திர ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் மோதலை நிவர்த்தி செய்வதில்’ கட்டுப்பாடுகள் உள்ளன, என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் கடந்த திங்களன்று தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினாவத்ராவால் அறிவிக்கப்பட்ட கம்போடியாவில் உள்ள சட்டவிரோத மோசடி மையங்களை ஒடுக்குவதற்கும் இந்த நடவடிக்கைகள் துணைபுரியும் என இராணுவம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோத நடவடிக்கைகள் நடைபெறும் பகுதிகளுக்கு மின்சாரம் உட்பட அத்தியாவசியப் பொருட்களை எல்லை தாண்டிய விநியோகத்தை தாய்லாந்து நிறுத்தும் என பிரதமர் பேடோங்டார்ன் தெரிவித்துள்ளார்.
தற்போது மூடப்பட்ட எல்லைமாவட்டங்களில் உபொன் ராட்சதானி, சுரின், புரிரம், ஸ்ரீசா கெட், சா கியோ, சாந்தபுரி மற்றும் டிராட் ஆகியவை அடங்கும்.
இந்த இருநாடுகளுக்குமிடையில் ஏற்பட்டுள்ள பெரும் பதற்றத்திற்கு மத்தியில் எதிர்காலத்தில், மேலும் என்னவெல்லாம் நடைபெறும் என உலகத் தரப்பில் கவனத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்>காசாவில் கடந்த 2 வருடங்களில் 4 லட்சம் பேர் மாயம்!

