செம்மணி மனித புதைகுழி குறித்த விசாரணைகள் சர்வதேச கண்காணிப்பின் கீழ் இடம்பெறுவதை ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க் உறுதி செய்யவேண்டும் என பாதிக்கப்பட்ட தமிழ் குடும்பங்களை பிரதிநிதித்துவம் செய்யும் சட்டத்தரணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
யாழ்செம்மணி மனிதபுதைகுழி காணப்படும் பகுதிக்கு வோல்க்கெர் டேர்க் விஜயம் மேற்கொண்டவேளை அவருடன் சேர்ந்து அந்த பகுதிக்கு சென்ற சட்டத்தரணிகள் பின்னர் செய்தியாளர் மாநாட்டில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
அவர்கள் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளதாவது.
செம்மணி மனித புதைகுழியை தோண்டும் பணிகளிற்கான நிதியை தாமதமின்றி தடையின்றி இலங்கை அரசாங்கம் வழங்கவேண்டும்.
இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்கவேண்டும்.
யாழ்ப்பாணத்தில் சேமிப்பதற்கான பாதுகாப்பு வசதிகள் போதியளவு இல்லாததால் நீண்டகால தீர்வு காணப்படும் வரை மனித எச்சங்களை கொழும்பிற்கு கொண்டு செல்லவேண்டும்.
மனித எச்சங்களை சேமித்து வைப்பதற்கும் , விஞ்ஞான ஆய்வுகளிற்கு அதனை கொண்டு செல்வதற்கும் யாழ்ப்பாணத்தில் தடயவியல் ஆய்வுகூடமொன்றை ஏற்படுத்தவேண்டும்.
முறையான அகழ்வாராய்;சி மற்றும் மனித எச்சங்களை அடையாளம் காண அதிநவீன தடயவியல் கருவிகள் சாதனங்கள் மற்றும் தகுதிவாய்ந்த பணியாளர்கள் அவசியம்.
பக்கசார்பின்மை மற்றும் தலையீடுகளை தவிர்ப்பதற்காக செம்மணிமனித புதைகுழியை அகழ்வும் நடவடிக்கைளை சர்வதேச நிபுணர்களின் பங்களிப்புடன் முன்னெடுக்கவேண்டும்.

