கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட மீனவர் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இந்திய இழுவைப் படகுகளால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் அதனால் ஏற்படும் சேதங்கள் குறித்து மீனவர் அமைப்பு பிரதிநிதிகள் கருத்துகளை முன்வைத்தனர்.
உரிமம் இன்றி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுதல், சுருக்கு மடி வலைகள் போன்ற தடை செய்யப்பட்ட வலைகள் மற்றும் வெடிபொருட்கள், லைட் கோர்ஸ் மீன்பிடி முறைகள் போன்ற அழிவுகரமான முறைகளைப் பயன்படுத்துதல் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. லைட் கோர்ஸ் மீன்பிடி முறைகளால் சிறிய மீன் குஞ்சுகள் கூட அழிக்கப்படுவதால், எதிர்கால வளங்களுக்கு சேதம் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டது.
இதுவரை இடம்பெற்ற அனைத்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளையும் முழுமையாக நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக பிரதி அமைச்சர் ரத்ன கமகே வலியுறுத்தினார்.
கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம், பொலிஸ் மற்றும் கடற்படையின் ஒத்துழைப்புடன் இந்த சட்டவிரோதச் செயல்களை ஒடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்திய இழுவைப் படகுகளால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்த கடற்படையின் தொடர்ச்சியான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துமாறும் பிரதி அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
பாரம்பரிய மடிவலை தொழிலில் டிராக்டர்கள் பயன்படுத்தப்படுவதால் கடற்கரைக்கு ஏற்படும் சேதங்கள் மற்றும் மணல் அகழ்வு போன்ற பல சுற்றுச்சூழல் பிரச்சினைகளும் இங்கு வெளிப்படுத்தப்பட்டன.
முல்லைத்தீவு பிரதேசத்தில் நந்திக்கடல் ஆழி மற்றும் நயினார்குளம் ஆழி போன்ற ஆழிகளை துப்பரவு செய்யும் நடவடிக்கைகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அத்துடன் துப்பரவு செய்து, விஞ்ஞானபூர்வமாக ஆழப்படுத்துவதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
2026 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் ஆழிகள் அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடுகளை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் கழிவுப் பொருட்களை முறையாக அகற்றுவதற்கு ஒரு விசேட பொறிமுறையின் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
கலங்கரை விளக்கம் (டுiபாவாழரளந) இல்லாதது, மாடிவலை முறைகளுக்கான நிலங்கள் மற்றும் உறுதிப்பத்திரங்களை வழங்குவதன் அவசியம், மற்றும் மீனவ படகுகளுக்கான எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் அவசியம் போன்ற மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. எரிபொருள் நிரப்பும் நிலையம் குறித்து பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் கலந்துரையாடி தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
மீனவர்கள் மற்றும் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு, புதிய வருமான வழிகளை கண்டறியவும், தொழில்களை மேம்படுத்தவும், ஐந்து லட்சம் ரூபாய் வரை கடன் வசதிகளை வழங்கும் முன்மொழியப்பட்ட கடன் திட்டம் குறித்து இங்கு தெளிவுபடுத்திய பிரதி அமைச்சர் ரத்ன கமகே, அதற்காக அனைவரும் முன்வருமாறு அழைப்பு விடுத்தார்.
இந்த மாவட்ட மீனவர் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நடத்த எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், மீனவர்கள் தங்களின் பொதுப் பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் (உதவிப் பணிப்பாளர், திட்டமிடல் அதிகாரி) முன்வைத்து, தீர்வு காணும் வாய்ப்பை அமைச்சகம் வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

