உள்ளூர்

வடக்கு மக்கள் எதிர்கொள்ளும் சமகால பிரச்சினைகளை ஐ.நா மனிதவுரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு வடக்கு ஆளுநர் எடுத்தரைத்துள்ளார்

காணி விடுவிப்புத் தொடர்பிலும், இராணுவப் பிரசன்னம் மற்றும் மக்களின் காணிகளில் இராணுவத்தினர் விவசாயம் மேற்கொள்வது தொடர்பிலும் வடமாகாண ஆளூனரிடம் கேட்டறிந்து கொண்ட ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பிலும் கரிசனையை வெளிப்படுத்தியதாக வடமாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையிலான குழுவினருக்கும், ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று (25-06) நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடல் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் ஊடகங்களுக்குத் தெரிவித்ததாவது,

மீள்குடியமர்வு – காணி விடுவிப்புத் தொடர்பில் தற்போதைய நிலைமைகளை ஆணையாளர் கேட்டார். மக்களின் காணிகள் விடுவிக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கு அமைவாக படிப்படியாக காணிகள் விடுவிக்கப்படுகின்றன. இன்னமும் காணிகள் விடுவிக்கப்படவேண்டியுள்ளன என்று சுட்டிக்காட்டினோம்.

மேலும், வனவளத் திணைக்களம், வன உயிரிகள் திணைக்களம் என்பன இங்குள்ள அதிகாரிகளுக்குத் தெரியாமல் காணிகளை சுவீகரித்துள்ளன.

இதனால் மக்களின் வாழ்விடங்கள் மற்றும் விவசாயக் காணிகள் என்பன இழக்கப்பட்டுள்ளன. தற்போதைய அரசாங்கம் மாவட்ட ரீதியிலான குழுக்களை அமைத்து இதனைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றது என்பதை ஆணையாளருக்கு தெரியப்படுத்தினேன்.

காணி உரித்து நிர்ணயத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானி தொடர்பிலும் ஆணையாளரும், ஐ.நா.வின் வதிவிடப் பிரதிநிதியும் விடயங்களைக் கேட்டறிந்து கொண்டனர்.

அந்தப் பொறிமுறை சரியானது என்றும், ஆனால் மக்களுக்கு போதியளவு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் எனவும் மாவட்டச் செயலர்கள் இதன்போது உயர்ஸ்தானிகருக்கு சுட்டிக்காட்டினர்.

மேலும், உயர்ஸ்தானிகர் இராணுவப் பிரசன்னம் மற்றும் மக்களின் காணிகளில் இராணுவத்தினர் விவசாயம் மேற்கொள்வது வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார்.

முன்னைய காலங்களுடன் ஒப்பிடுகையில் அந்த நடவடிக்கைகள் குறைந்துள்ளன என்றும் இன்னமும் சில பிரச்சினைகள் அதில் உள்ளன எனவும் உயர்ஸ்தானிகருக்கு சுட்டிக்காட்டினேன்.

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பிலும் உயர்ஸ்தானிகர் கரிசனையை வெளிப்படுத்தினார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னமும் தீர்வு கிடைக்கப்பெறவில்லை என்பதைக் குறிப்பிட்டேன்.

அத்துடன் கடந்த காலங்களிலிருந்த அரசாங்கங்கள் வெளிப்படுத்திய வேறுபாடுகள் இந்த அரசாங்கத்திடம் இல்லை என்பதையும், அது முற்போக்கானது என்பதையும் உயர்ஸ்தானிகருக்கு தெளிவுபடுத்தினேன்.

போதைப்பொருள் பயன்பாடு மற்றும் அதற்குரிய புனர்வாழ்வு நிலையம் என்பன தொடர்பிலும் உயர்ஸ்தானிகர் கேள்வி எழுப்பினார்.

போதைப்பொருள் பாவனையாளர்களுக்கான புனர்வாழ்வு நிலையம் இன்னமும் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவில்லை என்பதையும், விரைவில் அதை அமைப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது என்கின்ற விடயத்தையும் உயர்ஸ்தானிகருக்கு தெரியப்படுத்தினேன்.

அந்தப் புனர்வாழ்வு நிலையங்கள் யாரால் இயக்கப்படும் என்கின்ற விடயங்கள் தொடர்பிலும் அவர் கேட்டறிந்து கொண்டார்.

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகள் தொடர்பாகவும் உயர்ஸ்தானிகர் தனது கவனத்தைச் செலுத்தியிருந்தார்.

இந்தியாவிலிருந்து திரும்பி வரும் மக்களுக்கு உரிய உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்பதையும், அவ்வாறு செய்தால் மாத்திரமே அவர்களைத் தொடர்ச்சியாக இங்கே அழைக்க முடியும் என்ற விடயத்தையும் உயர்ஸ்தானிகருக்கு சுட்டிக்காட்டினேன்.

மேலும், வடக்கில் அமைக்கப்படவுள்ள முதலீட்டு வலயங்கள் தொடர்பிலும் என்னாலும், மாவட்டச் செயலர்களாலும் உயர்ஸ்தானிகருக்கு தெரியப்படுத்தப்பட்டது, என ஆளுநர் தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன், யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன், மன்னார் மாவட்டச் செயலர் க.கனகேஸ்வரன், கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரன், முல்லைத்தீவு மாவட்டச் செயலர் அ.உமாமகேஸ்வரன் ஆகியோரும், ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி தலைமையிலான குழுவினரும் பங்குபற்றினர். அத்துடன் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்